தி.மு.க.வால் ஆட்சியை கவிழ்க்க முடியாது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி


தி.மு.க.வால் ஆட்சியை கவிழ்க்க முடியாது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி
x
தினத்தந்தி 2 Oct 2017 4:45 AM IST (Updated: 2 Oct 2017 12:53 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வால் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை,

தமிழ்நாடு பாரம்பரிய வீர விளையாட்டு மாட்டுவண்டி காளைகள் ஒருங்கிணைந்த நலச்சங்கம் சார்பில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே உள்ள ஒத்தபட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பெரியபுள்ளான், மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து ஒருங்கிணைத்தது தான் உண்மையான அ.தி.மு.க. என்பது அனைவருக்கும் தெரியும். எங்கள் தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு பிரமாண பத்திரங்களை முழுமையாகவும், பெரும்பான்மையாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னம் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வான எங்களுக்கே கிடைக்கும். ஏனென்றால் பெரும்பான்மையான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம்.

ஆட்சியை கவிழ்க்க பூதக்கண்ணாடி அணிந்து எதிர்க்கட்சிகள் குற்றங்களை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஆனால் அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தி.மு.க.வால் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது. இந்த அரசு ஏற்கனவே சட்டமன்றத்தில் ஒருமுறை பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. ஆட்சி அதிகாரத்தை குறுக்கு வழியில் கைப்பற்ற எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன.

தமிழக மக்களின் நலனுக்காக ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சியை காக்க 1½ கோடி தொண்டர்கள் அரணாக இருப்பார்கள். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு 48 சதவீதத்துக்கு மேல் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்காலம் தொடங்குவதையொட்டி முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story