திருப்பூர் காந்திநகரில் பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் 2 டாஸ்மாக் கடைகள்
திருப்பூர் காந்திநகரில் 2 டாஸ்மாக் கடைகள் பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் காந்திநகரில் 2 டாஸ்மாக் கடைகள் பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை 6 மணிக்கு சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஏராளமான கடைகள் மூடப்பட்டாலும், ஒரு சில கடைகள் மூடப்படாமல் இருந்தது. இதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் உள்பட பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நெடுஞ்சாலைகளில் இருந்த கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ள ஒருசில விதி முறைகளின்படி தமிழகம் முழுவதும் மாநில நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் திருப்பூர் அவினாசி ரோடு காந்திநகர் 80 அடி ரோட்டில் நேர் எதிரெதிரே 2 டாஸ்மாக் கடைகள் (எண்.1961 மற்றும் 2279) உள்ளன. இந்த 2 கடைகளும் மூடப்பட்டு தற்போது திறக்கப்பட்ட கடைகள் ஆகும். இதில் ஒரு கடைக்கு பார் வசதி உள்ளது.
மற்றொரு கடைக்கு பார் இல்லை. இந்த 2 கடைகளுக்கும் மது குடிக்க வருபவர்கள் ரோட்டின் இருபுறமும் பாதி அளவு சாலையை ஆக்கிரமித்து அதிக அளவில் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் பலர் மதுவை வாங்கி கொண்டு கடை முன்பே அமர்ந்து குடிக்கின்றனர்.
குறிப்பாக மாலை 6 மணிக்கு மேல் 2 கடைகளுக்கு முன்பு கூட்டம் அலைமோதுகிறது. இதனால் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, வேலை முடிந்து அந்த ரோட்டில் செல்லும் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது.
இதேபோல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மது குடித்து விட்டு தாறுமாறாக இருசக்கரங்களை ஓட்டுவதால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகள் முன்பு விபத்துகள் ஏற்படுகிறது. அந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்தை சரி செய்யவோ, பொதுமக்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவோ அங்கு எந்த போலீசாரும் பணியில் இல்லை. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மிக அருகில் நின்று கொண்டு மது குடித்து விட்டு வருபவர்கள் மீது போலீசார் வழக்குபோட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:–
இந்த டாஸ்மாக் கடைகளின் அருகில் ஈ.பி.காலனி, ஏ.பி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் தினமும் இந்த வழியாகத்தான் சென்று வரவேண்டும்.
மேலும் இந்த பகுதியில் ஏராளமான பனியன் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. எனவே மாணவிகள், பெண் தொழிலாளர்கள் உள்பட அனைவரும் இந்த டாஸ்மாக் கடைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ரோட்டில் பெண்கள் நடமாட முடியாத அளவில் ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதும், மது குடித்துவிட்டு நடுரோட்டில் நின்று கொண்டு பெண்களை கேலி செய்வதும் தினமும் அரங்கேறி வருகிறது.
மேலும் தினமும் காலை 6 மணி முதலே அந்த கடைகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் காலை நேரத்தில் ஒருசிலர் மது குடித்து விட்டு ஆடைகள் விலகிய நிலையில் ரோட்டில் கிடப்பது பெண்களை முகம் சுளிக்க வைக்கிறது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிந்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே இப்பகுதி மக்களின் பாதுகாப்பை கருதி டாஸ்மாக் கடைகளுக்கு வெளியே வாகனங்கள் நிறுத்தி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை போலீசார் தடை செய்ய வேண்டும். இதேபோல் அந்த கடைகளுக்கு வெளியே சாலையோரம் நின்று மது குடிப்பதையும், காலை நேரத்தில் சட்டவிரோதமாக கள்ள சந்தையில் மது விற்பவர்கள் மீதும் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறினார்கள்.