நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எதிர்க்க கூடாது: நடிகர் ராஜசேகர் பேட்டி


நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எதிர்க்க கூடாது: நடிகர் ராஜசேகர் பேட்டி
x
தினத்தந்தி 2 Oct 2017 4:45 AM IST (Updated: 2 Oct 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எதிர்க்கக்கூடாது என்று ஈரோட்டில் நடிகர் ராஜசேகர் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு கவிதாலயம் இசை பயிற்சி பள்ளி சார்பில் சினிமா நடிகர் ராஜசேகர், நடிகை வி.ஆர்.திலகம் தம்பதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது ஈரோட்டில் நேற்று மாலை வழங்கப்பட்டது. முன்னதாக நடிகர் ராஜசேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

நடிகர் ஜெய்சங்கர் நடித்த மாணவன் என்ற திரைப்படத்தில் நான் சினிமாவில் அறிமுகம் ஆனேன். சுமார் 85 திரைப்படங்களில் நடித்து உள்ளேன். 300–க்கும் மேற்பட்ட டி.வி. தொடர்களில் நடித்து இருக்கிறேன். தற்போது நடிகர் நந்தாவின் லகரம் படத்தில் நடித்து வருகிறேன்.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நாடகக்கலை அழிந்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இசை சபாவில் டிக்கெட் கிடைக்காது. ஆனால் டி.வி. சேனல்கள் அதிகமாக வந்ததில் இருந்து மேடை நாடகத்தின் மீதான வரவேற்பு குறைந்துவிட்டது.

திரையரங்குகளில் வரி விதிக்கப்பட்டு இருப்பது சினிமாவுக்கு பின்னடைவாக உள்ளது. ரசிகர்கள் வரிக்காக கூடுதல் தொகை கொடுத்து சினிமா பார்க்க விரும்புவதில்லை. எனவே வரியை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் திருட்டு சி.டி.க்களையும் ஒழிக்க வேண்டும்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவது தொடர்பாக பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். அரசியலில் ஈடுபட அனைவருக்கும் உரிமை உள்ளது. யார் வேண்டுமானாலும் அரசியலில் ஈடுபட்டு வெற்றி பெறலாம். எனவே நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எதிர்க்க கூடாது.

இவ்வாறு நடிகர் ராஜசேகர் கூறினார்.


Next Story