பழுதடைந்த புகளூர் வாய்க்கால் பாலத்தில் செல்ல தடை எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது


பழுதடைந்த புகளூர் வாய்க்கால் பாலத்தில் செல்ல தடை எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 2 Oct 2017 4:15 AM IST (Updated: 2 Oct 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

“தினத்தந்தி” செய்தி எதிரொலியால் பழுதடைந்த புகளூர் வாய்க்கால் பாலத்தில் செல்ல தடைவிதித்து பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

நொய்யல்,

கோம்புப்பாளையம் ஊராட்சி, முத்தனூரில், புகளூர் வாய்க்காலின் குறுக்கே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு குறுகிய பாலம் கட்டப்பட்டது. இப்பாலத்தின் இருபுறமும், தடுப்பு சுவரோ, கைப்பிடி குழாய்களோ பொருத்தப்படவில்லை. இந்த வழியாக காவிரி ஆற்றுபடுகையில் உள்ள விவசாய நிலங்களுக்கு இடுபொருட்களையும், அங்கு விளைந்த விளை பொருட்களையும் விவசாயிகள் எடுத்து சென்று வந்தனர். அதேபோல் கால்நடைகளை மேய்ப்பதற்கும், காவிரி ஆற்றில் குளிப்பதற்கும் இந்த பாலத்தையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இப்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் பாலம் பழுதடைந்துள்ளது. மேலும் இப்பாலம் எந்த நேரத்திலும் புகளூர் வாய்க்காலுக்குள் விழும் நிலையில் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக செல்பவர்கள் பாலம் விழும்போது தண்ணீரில் மூழ்கி இறக்கும் அபாயம் உள்ளதால், பழுதடைந்த பாலத்தின் வழியாக விவசாயிகள் மூட்டைகளை வாகனங்களில் எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எச்சரிக்கை பலகை

மேலும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, நிலை தடுமாறி புகளூர் வாய்க்காலுக்குள் விழுந்து விபத்து ஏற்படும் நிலையும் உள்ளதால், புகளூர் வாய்க்காலின் குறுக்கே புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என பலமுறை முத்தனூர் பகுதி பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து “தினத்தந்தி” நாளிதழில் செய்தி பிரசுரம் செய்யப்பட்டது. இதை அறிந்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நேரில் வந்து பழுதடைந்த பாலத்தை ஆய்வு செய்து, பாலத்தை பொதுமக்கள் பயன் படுத்தாதவாறு தடுப்புகளை ஏற்படுத்தி, எச்சரிக்கை பலகையையும் நட்டு வைத்தனர். மேலும் பழுதடைந்த பாலம் விரைவில் சீரமைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story