திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா பந்தக்கால் நடப்பட்டது


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா பந்தக்கால் நடப்பட்டது
x
தினத்தந்தி 2 Oct 2017 4:30 AM IST (Updated: 2 Oct 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழாவுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை,

தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாகவும் திகழ்வது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஆகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மகா தீபத்திருவிழா நடைபெறும். இதில் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவர்.

இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் மாதம் 2-ந் தேதி மகா தீபத்திருவிழா நடக்கிறது.

மகாதீபத் திருவிழாவிற்கான பந்தக்கால் நடும் விழா கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபம் அருகே நேற்று நடந்தது.

இதனையொட்டி கோவிலில் இருந்து பந்தக்கால் கொண்டு வரப்பட்டு பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து விநாயகர், முருகர், மகா ரதம், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தேர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 9 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பந்தக்கால் நடப்பட்டது.

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் கந்தசாமி, முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், எம்.பி.க்கள் வனரோஜா, ஏழுமலை, எம்.எல்.ஏ.க்கள். பன்னீர்செல்வம், தூசி மோகன், அ.தி.மு.க. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள்நகர் கே.ராஜன், நகர செயலாளர் செல்வம், கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மகாதீபத் திருவிழாவை முன்னிட்டு நவம்பர் மாதம் 28-ந் தேதி இரவு வெள்ளித்தேர் பவனி நடக்கிறது. மறுநாள் 29-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. டிசம்பர் மாதம் 2-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 2 ஆயிரத்து 668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்படும்.

அதனை தொடர்ந்து பூர்வாங்க பணிகள் தொடங்கியது. அதன்படி தேர்களுக்கு பழுது பார்த்தல், வண்ணம் பூசுதல் உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

பந்தக்கால் முகூர்த்த விழாவை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதாலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


Related Tags :
Next Story