சுற்றுலா பயணிகளை பாதுகாக்க கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படும்


சுற்றுலா பயணிகளை பாதுகாக்க கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படும்
x
தினத்தந்தி 2 Oct 2017 4:02 AM IST (Updated: 2 Oct 2017 4:02 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா பயணிகளை பாதுகாக்க புதுவை கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி சுனில் குமார் கவுதம் கூறினார். உதயநாள் விழா புதுச்சேரி காவல்துறையின் 54–வது ஆண்டு உதயநாள்விழா காவலர் பயிற்சிபள்ளி மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது

புதுச்சேரி,

சுற்றுலா பயணிகளை பாதுகாக்க புதுவை கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி சுனில் குமார் கவுதம் கூறினார்.

புதுச்சேரி காவல்துறையின் 54–வது ஆண்டு உதயநாள்விழா காவலர் பயிற்சிபள்ளி மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் தலைமை தாங்கி, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து காவல்துறையினரின் குடும்ப பெண்கள் தயாரித்த கைவினை பொருட்களின் கண்காட்சியை திறந்து வைத்து அவர் பார்வையிட்டார்.

பின்னர் காவலர் குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சுனில்குமார் கவுதம் பரிசுகளை வழங்கி பாராட்டினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்த நாளில் புதுவை வாழ் பொதுமக்களுக்கும், காவல்துறையினரின் குடும்பத்தினருக்கும் எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஓராண்டாக புதுச்சேரி காவல் துறை போற்றக்கூடிய பலசாதனைகளை செய்துள்ளது. காவலர் பயிற்சிப்பள்ளி நவீனப்படுத்தப்பட்டுள்ளது. காவலர்களுக்கு புதுப்புது பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

புதுவை மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருந்து வருகிறது. மிக அதிகமாக கஞ்சா விற்பனை செய்தவர்களை பிடித்துள்ளோம். திருடர்கள் கைது செய்யப்பட்டு திருடப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக சட்டம்– ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சனுக்கும் அவரது குழுவினருக்கும் எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலேயே முதல் முறையாக புலிகள் என்ற பெயரில் ரோந்து அமைப்பை உருவாக்கியுள்ளோம். சுற்றுலா பயணிகளை பாதுகாக்க புதுவை கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க உள்ளோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவியல் சார்ந்த ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தோம். காவல்துறையினரின் வசதிக்காக கோரிமேடு காவலர் குடியிருப்பில் ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. காவலர்களின் குடும்பத்தினருக்கு எண்ணற்ற வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் எண்ணத்துடன் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

விலைமதிப்பற்ற உயிர்களை பாதுகாக்க தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல நடத்தப்பட்டன. நீல திமிங்கல (புளூவேல்) விளையாட்டில் இருந்து ஒரு பெண், ஒரு வாலிபர் காவல் துறையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறையினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுவை மாநிலத்தில் 3 காவல்நிலையங்கள் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் பாகூர் காவல்நிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது. தவளக்குப்பம், கிழக்கு போக்குவரத்து காவல்நிலையம் 2–வது, 3–வது இடங்களை பிடித்தன. அந்த காவல்நிலையங்களில் பணியாற்றி வரும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து காவல் துறையினரின் சாதனைமலர் வெளியிடப்பட்டது. விழாவில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜீவ்ரஞ்சன், சந்திரன், கவாஸ், அபூர்வாகுப்தா, மகேஷ்குமார் குப்தா, போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.


Next Story