சாராய விற்பனையை தடுக்காத சப்–இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு பணியிடை நீக்கம்
சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்காத சப்–இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்,
ஜோலார்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள குண்ணத்தூர், தாமலேரிமுத்தூர், பொன்னேரி, மண்டலவாடி, அரியாத்தூர், திரியாலம் உள்பட பல்வேறு பகுதிகளில் சாராய விற்பனை நடைபெறுவதாக புகார்கள் வந்தது. சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
சாராய விற்பனை அதிக அளவில் நடப்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கும் புகார்கள் வந்தன. அதன்பேரில் அவர் சாராயத்தை ஒழிக்க போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனாலும் சாராய விற்பனை அதிகரித்து வந்துள்ளது. இதுகுறித்து பலமுறை புகார்கள் வந்துள்ளது.
சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்காததால் கடந்த 29–ந் தேதி ஜோலார்பேட்டை சப்–இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், வாசுதேவன் மற்றும் 3 போலீசார் என 6 பேரை பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். திருப்பத்தூர் மதுவிலக்குப்பிரிவு ஏட்டு கவிதா உள்பட 4 பேரும் மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் மேற்கண்ட பிரச்சினையில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சப்–இன்ஸ்பெக்டர் ஏழுமலை, ஏட்டு கவிதா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.