ஆம்பூரில் மர்மகாய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்பு அரசு ஆஸ்பத்திரியில் அலைமோதும் கூட்டம்


ஆம்பூரில் மர்மகாய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்பு அரசு ஆஸ்பத்திரியில் அலைமோதும் கூட்டம்
x
தினத்தந்தி 2 Oct 2017 4:24 AM IST (Updated: 2 Oct 2017 4:24 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் மர்மகாய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஆம்பூர்,

ஆம்பூர் நகராட்சி பகுதியில் 36 வார்டுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மர்மகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஆம்பூர் நகராட்சி பகுதியில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் காய்ச்சல் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மர்ம காய்ச்சல் குழந்தைகளை பெரிதும் பாதிக்கிறது. குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் கூட்டம் அலைமோதுகிறது.

ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை, மதியம், இரவு என எந்த நேரமும் ஆம்பூர் ஆஸ்பத்திரியில் நூற்றுக்கணக்கானோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற நீண்ட வரிசையில் காத்து இருக்கின்றனர்.

பணியில் இருக்கும் டாக்டர்கள் காய்ச்சல் என்றாலே வேலூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் நிலை உள்ளது. சிகிச்சைக்காக வரும் குழந்தைகளுக்கு எத்னை நாள் காய்ச்சல் உள்ளது என எதுவுமே கேட்காமல் காய்ச்சல் அதிகம் உள்ளது. இதனால் வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுங்கள் என கூறுவதால் பெற்றோர்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் நகராட்சி பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தி ஆகும் இடமாக உள்ளது. இதனால் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. அரசு ஆஸ்பத்திரியில் காலை நேரத்தை போல் இரவு நேரத்திலும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இரவு நேரத்தில் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் இருக்க வேண்டி இருப்பதால் அனைவரையும் ஒருவரால் பார்க்க முடியவில்லை. எனவே இந்த காய்ச்சல் குறையும் வரையாவது மாலை நேரத்தில் கூடுதல் டாக்டரை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேபோல் நகராட்சி பகுதியில் தற்போது ஆங்காங்கே குப்பைகள் தேங்கி உள்ளது. கழிவுநீர் கால்வாய்களையும் தூர்வாருவதில்லை.

எனவே நகராட்சி நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி அனைத்து தெருக்களிலும் கொசு மருந்து அடிக்கவும், குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story