மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு: உரிமையாளரை கைது செய்யக்கோரி பிணத்துடன் கிராம மக்கள் சாலை மறியல்
கும்மிடிப்பூண்டி அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவத்தில்,
கும்மிடிப்பூண்டி,
அதன் உரிமையாளரை கைது செய்யக்கோரி பிணத்துடன் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த சாணாப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 45). விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள வயல்வெளி அருகே நடந்து சென்றார்.
அப்போது அங்கு விவசாய நிலம் ஒன்றில் கத்தரிச்செடியின் பாதுகாப்புக்காக சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்டு இருந்த மின்வேலி கம்பியில் அவரது உடல் பட்டதால், மின்சாரம் தாக்கி வெங்கடேசன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அந்த விவசாய நிலத்தை நிர்வகித்து வந்த யேசரியான்(52) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில் உயிரிழந்த விவசாயி வெங்கடேசனின் உடல் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மாலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்து வெங்கடேசனின் சாவுக்கு முக்கிய காரணமான நில உரிமையாளரையும் இந்த வழக்கில் சேர்த்து அவரை கைது செய்யக்கோரி சாணாப்புத்தூர் கிராம மக்கள் பாதிரிவேடு போலீஸ் நிலையம் முன்பு நேற்று மாலை திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அப்போது அங்கு ஒரு டிராக்டரில் வெங்கடேசனின் உடல் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் போலீஸ் நிலையம் செல்லும் சாலை திருப்பத்தில் மாதர்பாக்கம்–சத்யவேடு சாலையில் டிராக்டருடன் பிணத்தை வைத்து கிராமமக்கள் சுமார் 200–க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த பகுதியில் 2 டிராக்டர்கள் சாலை திருப்பத்தில் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த வழக்கில் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
இதனையடுத்து கிராம மக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.