வளத்தூர் உள்வட்ட கிராமங்கள் குடியாத்தம் தாலுகாவில் மீண்டும் இணைக்க உரிய நடவடிக்கை


வளத்தூர் உள்வட்ட கிராமங்கள் குடியாத்தம் தாலுகாவில் மீண்டும் இணைக்க உரிய நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Oct 2017 4:15 AM IST (Updated: 3 Oct 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு தாலுகாவில் இணைக்கப்பட்டுள்ள வளத்தூர் உள்வட்ட கிராமங்களை குடியாத்தம் தாலுகாவில் மீண்டும் இணைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ராமன் கூறினார்.

குடியாத்தம்,

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குடியாத்தம் ஒன்றியம் மேல்ஆலத்தூரில் கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் எஸ்.ஏ.ராமன் தலைமை தாங்கினார். பயிற்சி கலெக்டர் ஸ்ரீகாந்த், உதவி கலெக்டர் செல்வராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பிரேம்குமார், தாசில்தார்கள் பத்மநாபன், சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த், ரகு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி வரவேற்றார். ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் எஸ்.ஏ.ராமன் பேசியதாவது:-

மேல்ஆலத்தூர் ரெயில்வே தரைபாலத்தில் மழை காலங்களில் தேங்கும் தண்ணீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் வீட்டில் உள்ள பொருட்களில் மழைநீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

அதேபோல வீட்டுக்கு வெளியேயும் தண்ணீர் தேங்கி நின்றால் ஊராட்சி நிர்வாகத்திடமோ, வட்டார வளர்ச்சி அலுவலகத்திலேயோ தகவல் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வார்கள். பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மேல்ஆலத்தூர் ஊராட்சி ஏற்கனவே திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். மீண்டும் வெளியில் சென்று மலம் கழிக்க கூடாது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 234 ஊராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும், நகராட்சியிலும் கழிப்பிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டத்தை 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பேரணாம்பட்டு தாலுகாவில் இணைக்கப்பட்டுள்ள வளத்தூர் உள்வட்டத்தை சேர்ந்த கிராமங்கள் மீண்டும் குடியாத்தம் தாலுகாவில் இணைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள் வி.ராமு, குணசேகரன், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் சீனிவாசன், டி.கோபி, வேளாண்மை உதவி இயக்குனர் விஸ்வநாதன், விவசாயிகள் சங்க தலைவர் சம்பத்நாயுடு, பைரோஸ்அகமது, தலைமைஆசிரியர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் காந்தி ஜெயந்தியையொட்டி குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் எம்.கஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் சிட்டிபாபு, மாணிக்கம், சின்னமுருகன், ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார், நகராட்சி ஆணையாளர் சங்கர், கோவில் நிர்வாக அலுவலர் பரந்தாமகண்ணன், ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத், தாசில்தார்கள் நாகம்மாள், குணசீலன், குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். உதவி கலெக்டர் செல்வராஜ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் எஸ்.ஏ.ராமன் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து சமபந்தி விருந்தில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர்கள் வி.ராமு, ஜெ.கே.என்.பழனி, எஸ்.கோதண்டன் உள்பட ஏராளமான பொதுமக்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story