அடுக்குமாடி கட்டிடத்தில் வீடு தருவதாக ஊழியர்களிடம் ரூ.30 லட்சம் மோசடி


அடுக்குமாடி கட்டிடத்தில் வீடு தருவதாக ஊழியர்களிடம் ரூ.30 லட்சம் மோசடி
x

அடுக்குமாடி கட்டிடத்தில் வீடு தருவதாக இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்களிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த கட்டுமான அதிபர்கள் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மும்பை,

நவிமும்பையை சேர்ந்த கட்டுமான அதிபர்கள் பாசிர் அகமது முகமது ஹனிப் சேக், ஜாமீனர் பாசிர் அகமது சேக். இவர்கள் பன்வெலில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வீடுகள் விற்பனை செய்ய உள்ளதாக விளம்பரம் செய்திருந்தனர்.

இதை பார்த்த ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 14 பேர் ரியல் எஸ்டேட் ஏஜெண்டு விஜய் ஜாதவ் மூலம் ரூ.30 லட்சம் வரை பணம் கொடுத்து இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடு முன்பதிவு செய்திருந்தனர்.

கட்டுமான அதிபர்கள் இருவரும் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் வீடுகளை கொடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படுவதாக கூறப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்த்தனர். அப்போது அங்கு கட்டிடம் கட்டுவதற்கான பணியே தொடங்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து கலம்பொலி போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், கட்டுமான அதிபர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் ஏஜெண்டு ஆகிய 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story