கடலில் மூழ்கி தொழிலாளி சாவு மாயமான 2 மாணவர்களை தேடும் பணி தீவிரம்


கடலில் மூழ்கி தொழிலாளி சாவு மாயமான 2 மாணவர்களை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 3 Oct 2017 4:30 AM IST (Updated: 3 Oct 2017 3:53 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே கடலில் மூழ்கி தொழிலாளி இறந்தார். மேலும் கடலில் மூழ்கி மாயமான 2 மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிதம்பரம்,

சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள பி.முட்லூரை சேர்ந்தவர் அபு மகன் ஷேக்சுலைமான்(வயது 38). இவருடைய மனைவி ஆயிஷாபேகம்(25). இவர்களுக்கு ஆஷிக்(10), சுல்தான்(8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். தொழிலாளியான ஷேக்சுலைமான், கத்தார் நாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் அவர் சொந்த ஊருக்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் ஷேக்சுலைமான் தனது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் குளிப்பதற்காக சாமியார்பேட்டை கடலுக்கு சென்றனர். அங்கு ஷேக்சுலைமான், இவருடைய தம்பி ஷேக்சல்மான்(22), உறவினரான ஜாகீர்உசேன் மகன் தாகீர்உசேன்(18) ஆகிய 3 பேரும் சற்று ஆழமான பகுதிக்கு சென்று குளித்தனர்.

ஒருவர் சாவு

அப்போது எழுந்த ராட்சத அலையில் 3 பேரும் சிக்கி, கடலில் மூழ்கினர். இதை கரையில் இருந்து பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீனவர்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் பரங்கிப்பேட்டை தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் ஷேக்சுலைமான் உடல் குமாரப்பேட்டையில் கரை ஒதுங்கியது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் கடலில் மூழ்கி மாயமான 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்களது கதி என்ன என்பது பற்றி தெரியவில்லை.

மாணவர்கள்

கடலில் மூழ்கி மாயமான ஷேக்சல்மான், புதுச்சேரியில் உள்ள ராஜீவ்காந்தி கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டும், தாகீர்உசேன் கடலூர் புனித வளனார் கல்லூரியில் பி.பி.எம். முதலாம் ஆண்டும் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :
Next Story