மருத்துவக்கல்லூரி மாணவர்களை டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் கவர்னர் கிரண்பெடி பேட்டி


மருத்துவக்கல்லூரி மாணவர்களை டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் கவர்னர் கிரண்பெடி பேட்டி
x
தினத்தந்தி 3 Oct 2017 3:59 AM IST (Updated: 3 Oct 2017 3:59 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்களை டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் ஜிப்மர், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அரசு பொது மருத்துவமனையில் மட்டும் டெங்கு அறிகுறியுடன் 100க்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை அரசு மருத்துவமனைக்கு சென்று கவர்னர் கிரண்பெடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

பின்னர் நிருபர்களுக்கு கிரண்பெடி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரியில் கடந்த ஆண்டு 67 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெறுவதற்கு படுக்கை வசதி கூட இல்லாத நிலைமை உள்ளது. இதனை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யவேண்டும் என கூறியுள்ளேன். டெங்கு காய்ச்சல் தொடர்பாக மக்களுக்கு உடனடியாக எச்சரிக்கை விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.

மக்கள் துன்படும்போது நல்ல நிர்வாகியாக இருப்பவர்கள் வேதனைப்பட வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் அனைவருக்கும் பங்கு உள்ளது. குறிப்பாக அரசின் அனைத்துத் துறைகளும், எம்.எல்.ஏ.க்களும், பொதுமக்களும் ஒருங்கிணைந்து வீடு வீடாக, கடை கடையாக, வீதி வீதியாக சென்று டெங்கு கொசு வளரும் வகையில் தேங்கி இருக்கும் நீரை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

இதுகுறித்து பள்ளி மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அவர்களே இதற்கான பணியில் ஈடுபடுவர். கேரளத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதுபோல் புதுச்சேரியிலும் பின்பற்றலாம். மேலும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குடியிருப்போர் நலச்சங்கம், மார்க்கெட் சங்கங்கள், வியாபாரி சங்கத்தினரும், இணைந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

டெங்கு பாதிப்பு தொடங்கும் முன்பே இதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை அரசு துறைகள் இணைந்து மேற்கொண்டு இருக்க வேண்டும். குறிப்பாக வருமுன் காப்பதே சிறந்ததாகும். டெங்கு பாதிப்பு தொடர்பாக தேவையான மருந்துகள், சிகிச்சை வசதிகளை தயாராக வைத்திருக்கவும், அதற்கு தனியாக நிதி ஒதுக்கி செலவிடவும் அறிவுறுத்தி உள்ளேன்.

வரும் ஆண்டு முதல் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நோய் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டு பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவியரையும் டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

டெங்கு என்பது சாதாரண காய்ச்சல் இல்லை. மிகவும் அபாயகரமானது. மருத்துவர்கள் சிகிச்சை மட்டுமே தர முடியும். ஆனால் டெங்கு வராமல் தடுப்பது மக்கள் கைகளில் தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மோகன்குமார், உள்ளிருப்பு அதிகாரி ரவி, துணை இயக்குநர் ரகுநாதன், ரத்த வங்கி தலைமை அதிகாரி ராதிகா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story