செயற்கை மணல் திட்டில் குளித்தபோது சம்பவம்: புதுச்சேரி கடல் அலையில் 2 மாணவர்கள் சிக்கினர்
புதுச்சேரி கடற்கரையில் செயற்கை மணல் திட்டில் குளித்தபோது 2 மாணவர்கள் அலையில் சிக்கி மாயமானார்கள்.
புதுச்சேரி,
புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே இருந்து டூப்ளக்ஸ் சிலை வரை கடலில் செயற்கை மணல்திட்டு உருவாக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அங்கு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாலும், பாதுகாப்பை கருத்தில் கொண்டும் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடற்கரைக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் செயற்கை மணல் திட்டு பகுதியில் தடையை மீறி கடலில் இறங்கி குளித்து வருகிறார்கள். அதேபோல் கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு இருந்ததையொட்டி புதுச்சேரி கடற்கரைக்கு வந்த ஏராளமானோர் செயற்கை மணல்திட்டில் குளித்து மகிழ்ந்தனர்.
இந்தநிலையில் திருபுவனை சின்னபேட் பகுதியை சேர்ந்தவர் ஜெயசந்திரன் இவருடைய மகன் ரவிசங்கர் (வயது16). மதகடிப்பட்டில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தான். அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவரின் மகள் வாகினி, மகன் வசந்தகுமார் (16). பிளஸ்–1 மாணவன் ஆகியோர் நேற்று மதியம் புதுவைக்கு வந்தனர். இவர்கள் 3 பேரும் பாரதி பூங்காவுக்கு சென்றனர்.
அப்போது ரவிசங்கரும், வசந்தகுமாரும் கடலில் குளிக்கப்போவதாக வாகினியிடம் கூறிவிட்டு கடற்கரைக்கு சென்றனர். ஆனால் வெகுநேரமாகியும் அவர்கள் திரும்பி வராததால் சந்தேகமடைந்து வாகினி கடலுக்கு சென்று பார்த்தார்.
அப்போது கரையோரம் வசந்தகுமார், ரவிசங்கர் ஆகியோரின் துணிகளும், காலணிகளும் கிடந்தன. ஆனால் அவர்கள் இருவரையும் காணவில்லை. இதனால் வாகினி அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தார். ஆனால் எந்த தகவலும் தெரியவில்லை. எனவே அவர்கள் கடலில் குளித்த போது அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து தனது பெற்றோரிடம் அவர் தகவல் தெரிவித்தார். உடனே பதறியடித்துக் கொண்டு வசந்தகுமார், ரவிசங்கர் ஆகியோரின் பெற்றோர் புதுச்சேரிக்கு விரைந்து வந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி மற்றும் பெரியகடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் கடலோர காவல்படை போலீசாரும் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மாலை வரை தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு வேளையில் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் பெற்றோர் தவித்து வருகிறார்கள்.