ரூபாய் நோட்டு மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. விவகாரம்: பிரதமர் மோடிக்கு சரத்பவார் கடும் கண்டனம்


ரூபாய் நோட்டு மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. விவகாரம்: பிரதமர் மோடிக்கு சரத்பவார் கடும் கண்டனம்
x
தினத்தந்தி 4 Oct 2017 5:15 AM IST (Updated: 4 Oct 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

ரூபாய் நோட்டு மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. நடைமுறை விவகாரத்தில் பிரதமர் மோடி எடுத்த முடிவு,

மும்பை,

நாட்டின் பொருளாதாரத்தின் மீது பலத்த அடியாக விழுந்துவிட்டது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

நாட்டில் இன்றைக்கு முதலீட்டு சூழல் சாதகமாக இல்லை. ஆகையால், புதிய முதலீடுகள் ஏதுமில்லை. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) திட்டத்தின் கோ‌ஷம் ஆரம்பத்தில் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால், அதன் வெறுமை தற்போது வெளியாக தொடங்கிவிட்டது. போதுமான ஆயத்தம் இன்றி ரூபாய் நோட்டு மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. சட்ட நடைமுறை மீது பிரதமர் மோடி எடுத்த முடிவு, நாட்டின் பொருளாதாரத்தில் பலத்த அடியாக விழுந்துவிட்டது.

புல்லட் ரெயில் திட்டம் மும்பை– டெல்லி அல்லது டெல்லி– கொல்கத்தா அல்லது மும்பை– சென்னை ஆகிய நகரங்களுக்கு இடையே தான் தேவை என்று நான் கருதுகிறேன். மும்பை– ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டம் சாத்தியமானது அல்ல. இந்த புல்லட் ரெயில் திட்டத்தின் பின்னணியில் என்ன நோக்கம் இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை.

மேலும், இந்த திட்டத்தின்கீழ், ஏராளமான ரெயில் நிலையங்கள் குஜராத்தில் தான் ஏற்படுத்தப்படுகின்றன. மராட்டியத்தில், அரிதாக வெறும் 4 ரெயில் நிலையங்கள் மட்டுமே ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால், இத்திட்டத்துக்கு சம அளவிலான நிதியை மராட்டிய அரசு வழங்குகிறது. இதை தவிர்த்து, மும்பையிலும், மராட்டியத்திலும் ரெயில் சேவையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் மும்பை சேர்ந்தவர். ஆகையால், மும்பை மின்சார ரெயில் பிரச்சினை குறித்து அவருக்கு நல்ல அறிவு இருக்கும். ஒருமுறை ரெயில் விபத்து ஏற்பட்டபோது முன்னாள் ரெயில்வே மந்திரி லால்பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதே நடவடிக்கையை பியூஷ் கோயலிடம் இருந்தும் நான் எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை.

தீபாவளிக்குள் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து இருக்கிறார். தவறினால், நவம்பர் 5–ந் தேதிக்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு சரத்பவார் தெரிவித்தார்.

முன்னாள் முதல்–மந்திரி நாராயண் ரானே புதிய கட்சி தொடங்கியது குறித்து கேட்டதற்கு, ‘‘அவரால் அவரது சொந்த மகனையே தனது கட்சியில் இணைக்க முடியவில்லை. இதுபற்றி நான் மேற்கொண்டு கூற என்ன இருக்கிறது?’’ என்று 76 வயது சரத்பவார் பதில் அளித்தார்.


Next Story