மழைநீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க தடுப்பணைகள் கட்ட திட்டம் கலெக்டர் ஆய்வு


மழைநீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க தடுப்பணைகள் கட்ட திட்டம் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Oct 2017 4:30 AM IST (Updated: 5 Oct 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைநீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க தடுப்பணைகள் கட்ட மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பனைக்குளம்,

மழை பொழியும் அளவினை ஒப்பிடுகையில் ராமநாதபுரம் மாவட்டமானது சற்று பின்தங்கிய, வறட்சியான மாவட்டமாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை மேம்படுத்தவும், நீர் ஆதாரங்களை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 2–ந்தேதி மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திருப்புல்லாணி மற்றும் மண்டபம் ஆகிய யூனியன்களுக்கு உட்பட்ட சில ஊராட்சிகளில் தங்களது கிராமத்தில் நீர் ஆதாரங்களை பெருக்க கிராம ஊராட்சியின் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

குறிப்பாக மழைக்காலங்களில் சக்கரக்கோட்டை கண்மாயின் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் பெருகி முழு கொள்ளளவு எட்டும் சூழ்நிலையில் உபரி நீரானது சேதுக்கரை கால்வாய் வழியாக கடலில் வீணாக கலந்து வருகிறது. இதேபோல மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட காரான், நொச்சியூருணி, வெள்ளரிஓடை ஆகிய பகுதிகளில் உள்ள கால்வாய் வழியாகவும் மழைநீர் கடலில் வீணாகிறது. இத்தகைய சூழ்நிலையில் இந்த ஊராட்சி தீர்மானங்களுக்கு தீர்வு காணும் வகையில் மாவட்ட கலெக்டர் நடராஜன் அப்பகுதி மக்கள் பயன்பெறும் விதமாக அந்தந்த கிராமப்புற பகுதிகளில் உள்ள கால்வாய்களில் தடுப்பணைகள் கட்டி நீர் ஆதாரங்களை மேம்படுத்த ஏதுவான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில் கலெக்டர் நடராஜன் தலைமையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சார்ந்த அலுவலர்களுடன் சேதுக்கரை, புதுமடம், காரான், நொச்சியூருணி, வெள்ளரிஓடை ஆகிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று தடுப்பணைகள் கட்ட களஆய்வு மேற்கொண்டார். மேலும் தடுப்பணைகள் கட்டுவது குறித்து அந்தந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். ஆய்வு செய்த பிறகு தடுப்பணை கட்டுவதற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும் அரசின் ஒப்புதல் பெற்ற பின் மேற்குறிப்பிட்டுள்ள கிராமப் பகுதிகளில் கடலில் வீணாக சேரும் மழைநீரை சேமித்து ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்த ஏதுவாக தடுப்பணைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கிராமப் பொதுமக்களிடத்தில் அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் தாமஸ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜா, வேளாண்மை அலுவலர் அம்பேத்குமார் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story