ஈரோடு அருகே தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்


ஈரோடு அருகே தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Oct 2017 4:45 AM IST (Updated: 5 Oct 2017 1:52 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அருகே தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்ம இருப்பதாக கூறி உறவினர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

ஈரோடு அருகே உள்ள முள்ளாம்பரப்பு அசோகபுரம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். அவருடைய மனைவி அருணாதேவி. இவர்களுடைய மகள் கங்கா (வயது 19). இவரும், திருப்பூரை சேர்ந்த உறவினர் அருள்மணி என்பவரின் மகன் பாலுவும் (21) காதலித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் திருப்பூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து கங்காவை பாலு திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து பாலுவும், கங்காவும் திருப்பூரில் வசித்து வந்தனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு பாலு தனது மனைவியை மொடக்குறிச்சி அசோகபுரம் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு சென்றார்.

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கங்கா மின்விசிறி கொக்கியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். திருமணமான 3 மாதத்திலேயே கங்கா இறந்ததால் ஆர்.டி.ஓ. நேரில் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் அவரது உடலை போலீசார் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவில்லை.

நேற்று காலை ஆர்.டி.ஓ. நர்மதாதேவி நேரில் சென்று, கங்கா இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார். அதன் பின்னர் அவரது உடலை போலீசார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மாலை 3 மணி அளவில் கங்காவின் உறவினர்கள் அவரது சாவில் மர்ம இருப்பதாக கூறி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு முன்பு உள்ள ஈ.வி.என். ரோட்டுக்கு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள், ‘கங்கா இறந்ததும் அவரது கணவர் பாலுவுக்கு தகவல் கொடுத்துவிட்டோம். ஆனால் இதுவரை அவர் கங்காவின் உடலை பார்க்கவரவில்லை. அவரது சாவில் மர்ம இருப்பதாக தெரிகிறது. எனவே இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும் இறந்த கங்காவின் உடலை அவரது கணவரே பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்கு செய்ய வேண்டும்.’ என்றனர்.

அதற்கு போலீசார், ‘கங்காவின் உடலை பாலு வாங்கிச்சென்று இறுதிச்சடங்கு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றனர். அதை ஏற்றுக்கொண்ட கங்காவின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் ஈ.வி.என். ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே கங்காவின் உறவுக்கார பெண் ஒருவர் மயங்கி கீழே விழுந்ததார். அவரை மற்றவர்கள் தண்ணீர் தெளித்து எழுப்பினார்கள். இந்த சம்பவத்தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.


Next Story