அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தண்டலம் கிராமத்தில் குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.
தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து கடந்த கிராமசபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தண்டலம் கிராம பொதுமக்கள், தங்களுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் அமர்ந்து திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்திந்திய கைப்பூ வேலை, எம்பிராய்டரி கூலித்தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆதித்தா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமானுஜம் ஆகியோர் தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.