ஆர்.கே.பேட்டை அருகே தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்து 18 மாணவர்கள் காயம் அதிர்ச்சியில் டிரைவர் சாவு
ஆர்.கே.பேட்டை அருகே தனியார் பள்ளி பஸ் சாலையோரம் கவிழ்ந்ததில் 18 மாணவர்கள் காயம் அடைந்தனர். விபத்து நடந்த அதிர்ச்சியில் பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டை அருகே சந்தானவேணுகோபாலபுரம் கிராமத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு பள்ளிப்பட்டு தாலுகா ஸ்ரீகாளிகாபுரம், ஆர்.கே.பேட்டை உள்பட சில கிராமங்களைச் சேர்ந்த சில மாணவர்களை ஏற்றிக்கொண்டு அந்த பள்ளியைச் சேர்ந்த பஸ் நேற்று காலை புறப்பட்டது.
பஸ்சை கோபாலபுரம் மூங்கிலேரி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது பாஷா(வயது 47) என்பவர் ஓட்டினார். அந்த பஸ் மெயின் ரோட்டில் இருந்து இடதுபுறம் பள்ளிக்குள் செல்ல திரும்பும்போது நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதனால் பஸ்சுக்குள் பயணம் செய்த மாணவ, மாணவிகள் பயத்தில் அலறினார்கள்.
தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பஸ் விபத்தில் காயம் அடைந்த 18 மாணவர்களை பஸ்சில் இருந்து மீட்டனர். இதில் லேசான காயம் அடைந்த 12 மாணவர்கள் பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
படுகாயம் அடைந்த தவமணி (10), ஹரிஷ் (12), தனுஷ் (10), கமலேஷ் (9), பிரதியூஷா (8), பிரதீப் (10) ஆகிய 6 மாணவர்கள் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்தால் அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் முகம்மது பாஷா, அதே இடத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். அவருக்கு சமீம்(40) என்ற மனைவியும், சாதிக்பாஷா(23), சித்திக்பாஷா(19) என 2 மகன்கள் உள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.