குடிநீர் கேட்டு அரசு அலுவலகங்களை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு அரசு அலுவலகங்களை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 5 Oct 2017 4:15 AM IST (Updated: 5 Oct 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

எலச்சிபாளையம், குமாரபாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

எலச்சிபாளையம்,

உஞ்சனை கிராமம் செட்டிசாலைப்பாளையத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த ஒரு ஆண்டாக, சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அதற்கு மின் இணைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த பகுதிக்கு காவிரி குடிநீர் வழங்குவதற்கும் உள்ளாட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் செட்டிசாலைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். உடனே அங்கிருந்த பணியாளர்கள், உரிய தீர்வு காணுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

குமாரபாளையம் நகராட்சி

குமாரபாளையம் நகராட்சி 2-வது வார்டு 3-வது வீதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்தும் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று அப்பகுதி பொதுமக்கள் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் தங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வழங்குமாறு ஒரு கோரிக்கை மனுவை நகராட்சி மேலாளர் பிரான்சிஸ் சேவியரிடம் வழங்கினர். அப்போது மேலாளர், நகராட்சி ஆணையாளர் வந்தவுடன் உங்கள் கோரிக்கை மனு குறித்து உடனடி தீர்வு காணப்படும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Related Tags :
Next Story