வரும் காலங்களில் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும்


வரும் காலங்களில் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 5 Oct 2017 4:15 AM IST (Updated: 5 Oct 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

வரும் காலங்களில் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனரும், முதன்மை வனபாதுகாவலருமான வெங்கடேஷ் கூறினார்.

நெல்லை,

மேற்கு தொடர்ச்சி மலையான பொதிகை மலையில் தான் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் உயிர்நாடியான தாமிரபரணி ஆறு உற்பத்தியாகிறது. மேலும் பல அரிய வகையான உயிரினங்களும் இங்கு உள்ளன. இந்த அரிய வகையான உயிரினங்களும், தாவரங்களும் தற்போது அழிந்து வருகின்றன. இவற்றை பாதுகாப்பதற்கு வனத்துறையினர் பொதுமக்கள் மற்றும் வனகுழுவினர் உதவியுடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு பணிகளை செய்து வருகின்ற ஒருவருக்கு ஆண்டு தோறும் ‘ஏட்ரி இயற்கை பாதுகாவலர் விருது‘ வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெகஜோதிக்கு வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் விழா நேற்று மாவட்ட அறிவியல் மையத்தில் நடந்தது. சஞ்சய்குணசிங் தலைமை தாங்கினார். களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனரும், முதன்மை வனபாதுகாவலருமான வெங்கடேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெகஜோதிக்கு விருது வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மேற்கு தொடர்ச்சி மலையையும், மலையில் உள்ள வனத்தையும் குமரி முதல் குமுளி வரை 5 மாவட்டங்களில் வன பாதுகாப்பு குழுவினர், மகளிர் சுயஉதவி குழுவினர் மக்களின் பங்களிப்புடன் பாதுகாத்து வருகிறோம். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான பொதிகை மலைப்பகுதியில் மட்டும் 14 ஆறுகள் உற்பத்தியாகிறது. இந்த ஆறுகள் உற்பத்தியாவதற்கு இயற்கையும், வன வளமும் தான் காரணம்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்க செய்கின்ற தாமிரபரணி ஆறு வற்றாத ஜீவநதியாக இருப்பதற்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியை பாதுகாத்து வருவது தான் முக்கிய காரணமாகும். இல்லை எனில் தாமிரபரணி ஆறு இருக்கின்ற இடம் தெரியாமல் சென்று விடும். எனவே தாமிரபரணி ஆற்றை பாதுகாப்பது நமது கடமையாகும். வருங்கால சந்ததியினரும், மாணவ-மாணவிகளும் தாமிரபரணியை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும். நெல்லை மாவட்டம் சரணாலயத்தின் மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் புலிகள் சரணாலயம், மான்கள் சரணாலயம், பறவைகள் சரணாலயம் எல்லாம் உள்ளன. வனத்தையும், வன உயிரினங்களையும், அரியவகை தாவரங்களையும் பாதுகாப்பது நமது கடமையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் குணசிங் செல்லத்துரை, பேராசிரியர் சுபத்ரா தேவி, மாவட்ட அறிவியல் மைய அலுவலர் நவராம்குமார், காளிதாசன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் அகத்தியமலை மக்கள் சார் காப்பு மைய ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் நன்றி கூறினார். 

Related Tags :
Next Story