கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 Oct 2017 4:30 AM IST (Updated: 5 Oct 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 668 அடியாக அதிகரித்தது. மேலும் 46-வது நாளாக திருவண்ணாமலை உள்பட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கர்நாடக மாநிலம், பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அணைகள் அதன் முழு கொள்ளளவையும் எட்டியது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 22 கன அடி வந்து கொண்டிருந்தது.

தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு மற்றும் கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரங்களில் நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் அதிகாலை வரை பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. நேற்று மதியம் 1 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 668 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 2 ஆயிரத்து 362 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் அணையின் கீழ் பகுதியில் பூங்காவிற்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் மூழ்கியது. அணைக்கு செல்லும் பிரதான வழியாக சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. அணை மேல்புறம் வழியாக பூங்காவிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வழியே பூங்காவிற்குள் சென்ற சுற்றுலா பயணிகள் சிலர், தடையை மீறி தரைப்பாலத்தை கடந்து சென்றனர். சிலர் அச்சமின்றி தரைப்பாலத்தை கடந்து செல்லும் ஆற்று நீரில் நின்றபடி தங்களுடைய செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

அணையின் மொத்த கொள்ளளவு 52 அடியாகும். நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 51 அடியாகும். மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு தொடர்ந்து 46-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Related Tags :
Next Story