டாஸ்மாக்கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள் திருட்டு


டாஸ்மாக்கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 5 Oct 2017 4:00 AM IST (Updated: 5 Oct 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

ஆடுதுறை அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்களை திருடிய ஆசாமிகள் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றனர்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறை, எஸ்.புதூர் மெயின் ரோட்டில் இருந்த டாஸ்மாக் கடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. பின்னர் அந்த கடையை சாத்தனூர் சாலையில் அதிகாரிகள் திறந்தனர். மதுக்கடை திறப்புக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சில நாட்கள் மதுக்கடை பூட்டப்பட்டு இருந்தது. பின்னர் இந்த கடையை போலீஸ் பாதுகாப்போடு அதிகாரிகள் மீண்டும் திறந்து வியாபாரத்தை தொடங்கினர். நேற்று அதிகாலை இந்த டாஸ்மாக்கடையிலிருந்து அதிக அளவு புகை வெளியேறியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கடை மேற்பார்வையாளர் குருநாதன் மற்றும் அதிகாரிகளும் கடைக்கு வந்து பார்த்தனர். அப்போது கடையின் பின்பக்க சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளை போடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

சேதம்

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி செல்லதுரை தலைமையிலான தீயணைப்புவீரர்கள் டாஸ்மாக் கடையின் ஷட்டரை திறந்து கடைக்குள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த மதுபாட்டில்களை திருடி விட்டு கடைக்கு தீ வைத்து விட்டு சென்றதும் அப்போது கடையில் இருந்த மதுபாட்டில்கள் அடங்கிய அட்டைபெட்டிகள் கீழே விழுந்து உடைந்ததும் தெரியவந்தது. தீயில் எரிந்தும் சில மதுபாட்டில்கள் சேதமடைந்தன. சேதமடைந்த மற்றும் திருட்டுப்போன மதுபாட்டில்களின் மதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்கள். இது குறித்து திருநீலக்குடி போலீசார் விசாரணை நடத்தி இந்த செயலில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வருகிறார்கள். டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்களை திருடி சென்ற ஆசாமிகள் கடைக்கும் தீ வைத்த சம்பவம் ஆடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story