டெங்கு காய்ச்சலுக்காக 24 மணிநேரமும் இயங்கக்கூடிய சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் கலெக்டர் தகவல்


டெங்கு காய்ச்சலுக்காக 24 மணிநேரமும் இயங்கக்கூடிய சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 5 Oct 2017 4:15 AM IST (Updated: 5 Oct 2017 3:14 AM IST)
t-max-icont-min-icon

அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்காக 24 மணிநேரமும் இயங்கக்கூடிய மருத்துவ சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது என்று கலெக்டர் லட்சுமி பிரியா தெரிவித்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத் துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழக அரசு இன்று (வியாழக்கிழமை) மற்றும் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இம்மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ அலுவலர்களை கொண்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று (வியாழக்கிழமை) முதல் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயம் தொடர்ந்து 5 நாட்கள் வழங்கப்படும். அனைத்து பள்ளிகளிலும் டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழியுடன், டெங்கு குறித்து மருத்துவர்கள் கருத்துரை வழங்கவுள்ளார்கள்.

பள்ளிகளில் குடிநீர் வினியோகிப்பது, மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சாதாரண காய்ச்சல் ஏற்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனைகளில் காண்பித்து சிகிச்சை பெறலாம். அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு என்று சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய வகையில் ஏற்படுத்தப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நகராட்சிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் வாரம் ஒரு முறை சுத்தம் செய்து, குளோரின் கரைசல் தெளிக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கழிவுநீர் வாய்க்கால் கள் சுத்தப்படுத்துதல், மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்துதல் போன்ற பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களை அணுக வேண்டும். தங்களுடைய சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், தண்ணீர் தொட்டி, தண்ணீர் சேமிப்பு பாத்திரங்களை மூடி பராமரித்திட வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

இதில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லோகேஷ்வரி, இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் செல்வராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், துணை இயக்குனர் சுகாதார பணிகள் ஹேமந்த்சந்த் காந்தி, கோட்டாட்சியர்கள் மோகனராஜன், டீனாகுமாரி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிச்சாமி, அரியலூர் வட்டாட்சியர் முத்துலட்சுமி மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story