போலீஸ்காரரை கொல்ல முயன்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு கடும்காவல் தண்டனை
அவுரங்காபாத் ஹிமாயத் பாக் பகுதியில் கடந்த 2012–ம் ஆண்டு மார்ச் மாதம், தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அவுரங்காபாத்,
அவுரங்காபாத் ஹிமாயத் பாக் பகுதியில் கடந்த 2012–ம் ஆண்டு மார்ச் மாதம், தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது சிமி இயக்க உறுப்பினர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு போலீசாரின் உடலை துப்பாக்கி குண்டு துளைத்தது. இதைத்தொடர்ந்து, போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.
சிமி இயக்க உறுப்பினர்கள் 4 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் செசன்சு கோர்ட்டு நீதிபதி வி.வி.பாட்டீல் நேற்று முன்தினம் தீர்ப்பு அறிவித்தார்.
அதன்படி, கைதான இஸ்மாயில்கான் (வயது 32) மற்றும் ஷாகிர் உசேன் (20) ஆகியோரை குற்றவாளிகள் என்று அறிவித்ததுடன், அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் கடும்காவல் தண்டனை விதித்தார். மற்ற இருவரும் விடுவிக்கப்பட்டனர். இஸ்மாயில்கானுக்கு அவுரங்காபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலும் தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.