வாலிபரை கொல்ல முயற்சி: பெங்களூருவை சேர்ந்த ரவுடி கைது


வாலிபரை கொல்ல முயற்சி: பெங்களூருவை சேர்ந்த ரவுடி கைது
x
தினத்தந்தி 5 Oct 2017 5:13 AM IST (Updated: 5 Oct 2017 5:13 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் பெங்களூருவை சேர்ந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

கோலார் தங்கவயல்,

வாலிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் பெங்களூருவை சேர்ந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். கள்ளத்தொடர்பு விவகாரத்தில் தீர்த்துக்கட்ட முயன்றது அம்பலமாகி உள்ளது.

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா சென்னசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் சுகில் பேக் (வயது 30). இவருடைய மனைவி நகின் தாஜ். இந்த நிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 29–ந்தேதி நள்ளிரவில் இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. இதனால், சுகில் பேக் எழுந்து வந்து கதவை திறந்தார். அப்போது வாசலில் நின்று கொண்டிருந்த மர்மநபர் ஒருவர், சுகில் பேக்கின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில், சுகில் பேக் பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி நகின் தாஜ், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுகில் பேக்கை சிக்பள்ளாப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோலாரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிந்தாமணி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, சுகில் பேக்கின் மனைவி நகின் தாஜ் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், பெங்களூரு ஜே.ஜே.ஆர். நகரை சேர்ந்த பமீஜ் பேக் (28) என்பவர் எனது கணவரை கத்தியால் கழுத்தை அறுத்து சென்றிருக்கலாம் என்று கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பமீஜ் பேக் தான் சுகில் பேக்கை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து சிக்பள்ளாப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி உத்தரவின்பேரில் சிந்தாமணி துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, சிந்தாமணி புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் குமார், சப்–இன்ஸ்பெக்டர் லியாகத் ஆகியோர் தலைமையிலான போலீசார் பமீஜ் பேக்கை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், பெங்களூரு ஜே.ஜே.ஆர். நகரில் பதுங்கி இருந்த பமீஜ் பேக்கை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சுகில் பேக்கிற்கும், பமீஜ் பேக்கின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதன்காரணமாக பமீஜ் பேக், சுகில் பேக்கை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. மேலும், பமீஜ் பேக் மீது பெங்களூரு சாம்ராஜ்பேட்டை, கோவிந்தபுரா, பேட்ராயனபுரா, ஜே.ஜே.ஆர். நகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 10 கொலை முயற்சி உள்பட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் பேட்ராயனபுரா, ஜே.ஜே.ஆர். நகர் போலீஸ் நிலையங்களில் பமீஜ் பேக்கின் பெயர் ரவுடி பட்டியலில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை சிந்தாமணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story