மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு
கர்நாடக மாநிலம் முழுவதும் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக மந்திரி காகோடு திம்மப்பா தெரிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடக வருவாய்த்துறை மந்திரி காகோடு திம்மப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் நிரம்பி வருகின்றன. கடந்த ஜூன் மாதம் 1–ந் தேதி முதல் செப்டம்பர் 30–ந் தேதி வரை தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் மாநிலத்தின் உள் மாவட்டங்களில் வழக்கத்தை விட 27 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.ஆனால் மலைநாடு பகுதிகளில் 18 சதவீதம், கடலோர பகுதிகளில் 15 சதவீதம், வடகர்நாடகத்தில் 6 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்த ஆண்டு சராசரியாக வழக்கத்தை விட 8 சதவீதம் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. 839 மில்லி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 774 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்துள்ளது.
மழை நன்றாக பெய்துள்ளதால் அடுத்த ஆண்டு கோடையில் குடிநீர் பிரச்சினை ஏற்படாது. எதிர்பார்த்த அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை என்ற குறையும் இருக்கிறது. மழை பற்றாக்குறையாக பெய்துள்ள பகுதிகளில் வறட்சி நிலை குறித்து ஆராய மந்திரிசபை துணை குழு கூடி ஆலோசனை நடத்தும்.கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை பெய்த மழைக்கு 96 பேர் மரணம் அடைந்துள்ளனர். வறட்சி மற்றும் வெள்ளத்தால் ஏற்பாட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய இந்த தடவை புதிய நடைமுறையை கையாள முடிவு செய்துள்ளோம். முன்பு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி காகிதங்களில் பாதிப்புகள் குறித்து எழுதி கொடுப்பார்கள்.
ஆனால் தற்போது நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒரு செல்போன் செயலியை (அப்) உருவாக்கியுள்ளோம். அதிகாரிகள் ஆய்வுகளை நடத்தி அதன் விவரங்களை உரிய ஆதாரங்களுடன் அந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் வறட்சி மற்றும் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு பணியை தொடங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.கடந்த ஆண்டு மத்திய அரசு வறட்சி நிவாரண பணிகளுக்கு ரூ.2,266 கோடி வழங்கியது. இந்த நிதி விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டது. இந்த நிதியில் இன்னும் ரூ.50 கோடி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. சில விவசாயிகள் சரியான ஆவணங்களை வழங்காததால் இந்த நிதி வழங்கப்படாமல் உள்ளது.
இந்த ஆண்டு வறட்சி, வெள்ளம் குறித்து ஆய்வு பணி முடிந்த பிறகு பயிர் இழப்பீடு குறித்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். மத்திய அரசு நிவாரண நிதியை வழங்கினால் மகிழ்ச்சி அடைவேன். இல்லாவிட்டால் மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும்.கடந்த ஆண்டு மத்திய அரசு நிவாரண நிதியை வழங்க தாமதம் செய்தது. இதனால் மாநில அரசு தனது சொந்த நிதியை கொண்டு நிவாரண பணிகளை மேற்கொண்டது. ‘அக்ரம–சக்ரம‘ திட்டத்தில் அரசு நிலத்தில் கட்டியுள்ள வீடுகளை முறைப்படுத்த கோரி கிராமப்புறங்களில் இருந்து 4½ லட்சம் மனுக்கள் வந்தன. இதில் பெரும்பாலான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.
புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளை முறைப்படுத்த ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனால் 2½ லட்சம் மனுக்கள் நிலுவையில் உள்ளன. டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பின்னர் மீண்டும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்படும்.இவ்வாறு மந்திரி காகோடு திம்மப்பா கூறினார்.