அரசு மகளிர் கல்லூரியில் டெங்கு தடுப்பு துப்புரவு பணி கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்


அரசு மகளிர் கல்லூரியில் டெங்கு தடுப்பு துப்புரவு பணி கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Oct 2017 4:15 AM IST (Updated: 6 Oct 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு மகளிர் கல்லூரியில் டெங்கு தடுப்பு கையெழுத்து இயக்கம் மற்றும் துப்புரவு பணிகளை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

சேலம்,

டெங்கு தடுப்பு கையெழுத்து இயக்கம் மற்றும் தீவிர துப்புரவு பணிகளை சேலம் கோரிமேடு அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:–

சேலம் மாவட்டத்தில் தொற்று நோய் தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமைதோறும் டெங்கு தடுப்பு தினமாக கடைபிடித்து, தீவிர துப்புரவு பணி, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியதன் அடிப்படையில் மகளிர் கல்லூரியில் டெங்கு தடுப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

உயிர்கள் காப்பாற்றப்படும்

மாணவ, மாணவிகள் மூலம் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் உடனடியாக பொதுமக்களை சென்றடையும் என்பதை அடிப்படையாக கொண்டு, சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 16 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் 23 ஆயிரத்து 450 பேர் மூலம் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமூக நோக்கத்தோடு டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான விவரங்களை பெற்றோர்களிடமும் அருகில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் மாணவர்கள் விளக்கி கூறினால் பல உயிர்கள் காப்பாற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ரவி, மாநகர நல அலுவலர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவிகள் டெங்கு தடுப்பு உறுதிமொழியினை கலெக்டர் ரோகிணி தலைமையில் எடுத்துக் கொண்டனர்.


Next Story