உண்டு உறைவிட பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை புகார்: மாணவ, மாணவிகள் சாலை மறியல்


உண்டு உறைவிட பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை புகார்: மாணவ, மாணவிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Oct 2017 4:30 AM IST (Updated: 6 Oct 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

கொல்லிமலை அரசு உண்டு உறைவிட பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கூறி, மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டர் காரையும் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் எடப்புளிநாடு ஊராட்சி செங்கரை கிராமத்தில் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த பள்ளியில் 10 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் 3 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாகவும், மேலும் 2 ஆசிரியர்களை தற்போது இடமாற்றம் செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பள்ளியின் மேல்நிலை வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகள் செங்கரை மெயின்ரோடு சாலைக்கு நேற்று காலையில் திரண்டு வந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் அந்த மாணவ, மாணவிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அந்த மாணவ, மாணவிகள் பள்ளியில் 7 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருந்து வருவதாகவும், அதனால் தங்களது கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், விரைவில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையில் அந்த வழியே வந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் காரையும் மாணவ, மாணவிகள் முற்றுகையிட முயற்சி செய்தனர். இதையடுத்து போலீசார் மாணவ, மாணவிகளை தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் மாவட்ட நிர்வாகத்திடம் இதுகுறித்து தெரிவித்து, ஆசிரியர்கள் நியமனத்திற்கு உரிய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு மாணவ, மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Related Tags :
Next Story