தஞ்சை மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு


தஞ்சை மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு
x
தினத்தந்தி 6 Oct 2017 4:30 AM IST (Updated: 6 Oct 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 3¼ லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதைநெல், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா பகுதியான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதை பொறுத்து இதன் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு போதிய அளவு தண்ணீர் இல்லாததால் வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.

இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியாலும், மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இல்லாததாலும் குறுவை, சம்பா சாகுபடிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் சம்பா, தாளடி சாகுபடிக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கடந்த 2-ந்தேதி திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததை தொடர்ந்து கல்லணையில் இருந்து பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப் பட்டது. அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டனர்.

காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது நேரடி நெல் விதைப்பு, நடவுப்பணிகள் மூலம் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 26 ஆயிரத்து 250 ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டு சம்பா, தாளடி பருவத்திற்கு தேவையான மத்திய கால ரகங்களான கோ-50, ஆடுதுறை 46, ஆடுதுறை 50, ஆடுதுறை 38, ஆடுதுறை 39, சுவர்ணசப்-1 மற்றும் குறுகிய கால ரகங்களான கோ-51 ஆகிய ரகங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பா சாகுபடி 2 லட்சத்து 62 ஆயிரத்து 500 ஏக்கரிலும், தாளடி 67 ஆயிரத்து 500 ஏக்கரிலும் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தேவையான உரங்கள், விதை நெல் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் தற்போது வரை 9 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பும் செய்யப்பட்டுள்ளது. 45 ஆயிரம் ஏக்கரில் நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளன. 

Next Story