மழைநீர் புகுந்த பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு கால்வாய் அடைப்புகள் அகற்றம்


மழைநீர் புகுந்த பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு கால்வாய் அடைப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 6 Oct 2017 5:38 AM IST (Updated: 6 Oct 2017 5:38 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த பகுதிகளில் கால்வாய் அடைப்புகள் அகற்றப்பட்டது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் கொளுத்துகிறது. இரவில் மழை கொட்டி வருகிறது. கடந்த 3–ந் தேதி இரவு பெய்த பலத்தமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.

வேலூர் கொணவட்டம், சேண்பாக்கம், கொசப்பேட்டை, சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், கஸ்பா, கன்சால்பேட்டை, விருதம்பட்டு, கழிஞ்சூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்துவிட்டன. பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். தெருக்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

கன்சால்பேட்டையில் கழிவுநீர் கால்வாய் மீது சிமெண்டு சிலாப் போட்டு பலர் மூடி வைத்திருப்பதால் தண்ணீர் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்து, தெருக்களிலும் தேங்கி கிடந்தது.

தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்றவும், தொடர்ந்து தண்ணீர் வழிந்தோடுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் சென்று தேங்கி கிடந்த தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் செல்லும் நிக்கல்சன் கால்வாயில் குப்பைகள் கொட்டப்பட்டு அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தெருக்களுக்குள் வந்துள்ளது.

இதனால் நிக்கல்சன் கால்வாயில் அடைப்பு ஏற்படுத்திய குப்பைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி தண்ணீர் செல்ல வழிவகை செய்தனர். அதேபோன்று கழிவுநீர் கால்வாய்களை மூடி ஆக்கிரமிப்பு செய்திருந்ததையும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றினர்.

இந்த பணியை மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், தாசில்தார் பாலாஜி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Related Tags :
Next Story