மக்கள் நலனே முக்கியம் என்று பணியாற்றுவோம் சி.த.செல்லப்பாண்டியன் அறிக்கை
மக்கள் நலனே முக்கியம் என்று தொடர்ந்து பணியாற்றுவோம் என்று தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
மக்கள் நலனே முக்கியம் என்று தொடர்ந்து பணியாற்றுவோம் என்று தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
அனல்மின்நிலையம்தூத்துக்குடி அனல்மின்நிலையம் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் நமது தேவைக்கு போக, மீதி மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அனல்மின்நிலையம் அமைக்கப்பட்ட போது இருந்த மக்கள் தொகை, தொழிற்சாலைகளை விட தற்போது அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் மின்சாரம் தேவை அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் அனல்மின்நிலையம் அமைக்கப்பட்டு 35 ஆண்டுகள் ஆவதால் மிகவும் பழமையானதாகவும் உள்ளது. ஆனாலும் திறம்பட மின்சாரம் உற்பத்தி நடந்து வருகிறது.
மூடப்படாதுஆனால் தி.மு.க.வினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அனல்மின்நிலையத்தை பாதுகாக்க போராட்டம் நடத்தப் போவதாக கூறப்படுகிறது. கீதாஜீவன் அமைச்சராக இருந்த போது, தூத்துக்குடியை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று கூறினார். அதனை செய்தாரா?. அவர், ஆட்சியில் இருந்தால் ஒரு செயல்பாடும், இல்லையென்றால் வேறு செயல்பாடுமாக உள்ளது. தி.மு.க.வின் இரட்டைவேடம் எடுபடாது.
முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு செயல்பட்டு வருகிறது. அதற்கு தடையாக இருப்பவர்களின் திட்டம் தவிடுபொடியாகும். எந்தவொரு காலகட்டத்திலும் தூத்துக்குடி அனல்மின்நிலையம் மூடப்படாது. மக்கள் நலன்தான் முக்கியம் என்று தொடர்ந்து பணியாற்றுவோம். அ.தி.மு.க. அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறினாலும், தூத்துக்குடி மக்கள் தி.மு.க.வின் பொய் பிரசாரத்தை நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.