தூத்துக்குடியில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தூத்துக்குடி மாநகர போக்குவரத்து போலீஸ் சார்பில் தூத்துக்குடி குருஸ் பர்னாந்து சிலை அருகே போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இன்ஸ்பெக்டர் சந்தணகுமார் தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியையொட்டி குரூஸ் பர்னாந்து சிலை அருகே அமைக்கப்பட்டு இருந்த சிறிய மேடையில் மாணவ–மாணவிகள் நிறுத்தப்பட்டு இருந்தனர். அதில் சில மாணவ–மாணவிகள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் சாலை விதிகளை மதித்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று வலியுறுத்தும் வகையிலான பதாகைகளையும் ஏந்தியபடி நின்றனர். தொடர்ந்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் மாணவ–மாணவிகள் வினியோகம் செய்தனர்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள், ஊர்க்காவலபெருமாள் மற்றும் பொதுமக்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.