ரூ.4 லட்சம் செம்மரக்கட்டைகள் சிக்கின ஒருவர் கைது
அத்திமாஞ்சேரிப்பேட்டையில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
பள்ளிப்பட்டு,
திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்திரன் உத்தரவின்பேரில் பள்ளிப்பட்டு மூன்று சாலை சந்திப்பில் பள்ளிப்பட்டு சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தும்படி போலீசார் சைகை செய்தனர்.ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றார். இதையடுத்து சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் அந்த காரை துரத்தி சென்றனர். அதே சமயம் கார் நிற்காமல் செல்லும் தகவலை பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து பொதட்டூர்பேட்டை சப்–இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ், மற்றும் போலீசார் அத்திமாஞ்சேரிப்பேட்டை அம்பேத்கர் சிலை அருகே அந்த காரை மடக்கி பிடித்தனர். காரில் இருந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இருப்பினும் போலீசார் காரில் வந்த ஒருவரை லாவகமாக பிடித்தனர்.அந்த காரை சோதனை செய்தபோது அதில் 5 அடி முதல் 6 அடி நீளமுள்ள 15 செம்மரத்துண்டுகள் இருந்தன. போலீஸ் விசாரணையில் காரில் வந்தவர் வேலூர் மாவட்டம் கீழ் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவகுமார் (வயது 31) என்பது தெரியவந்தது.
போலீசார் சிவகுமாரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரகட்டைகளின் மதிப்பு ரூ.4 லட்சம் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story