மணல் கடத்தல்; 7 பேர் கைது
கடம்பத்தூர் அருகே உள்ள கசவநல்லாத்தூர் கூவம் ஆற்றுப்பகுதி அருகே போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் கடம்பத்தூர் சப்–இன்ஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் போலீசார் கடம்பத்தூர் அருகே உள்ள கசவநல்லாத்தூர் கூவம் ஆற்றுப்பகுதி அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மணல் கடத்தி வந்த 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து அதை ஓட்டி வந்த கசவநல்லாத்தூரை சேர்ந்த சிலம்பரசன் (வயது 23), விஜயகுமார்(21), அகரத்தை சேர்ந்த மணிகண்டன்(22), பூவரசன்(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த ஒருவர் மாட்டு வண்டியை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்று விட்டார். போலீசார் அந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தப்பியோடியவரை தேடிவருகின்றனர்.
அதேபோல மப்பேடு போலீசார் நேற்று முன்தினம் சத்தரை பகுதியில் உள்ள கூவம் ஆற்றுப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மணல் கடத்தி வந்த ஒரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்து அதை ஓட்டி வந்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த மைக்கேல் (34), டில்லிபாபு (21), உடனிருந்த மப்பேட்டை சேர்ந்த ரகுபதி(39) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.