மும்பையில் இடி, மின்னலுடன் திடீர் மழை
கொளுத்திய வெயிலுக்கு இதமாக மும்பையில் இடி, மின்னலுடன் திடீரென மழை பெய்தது.
மும்பை,
மும்பையில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் பருவமழைக்காலம் ஆகும். இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் பருவமழைக்காலத்தில் நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பின. பெருநகரங்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளும், அணைகளும் நிரம்பின.கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் பேய் மழை கொட்டி தீர்த்தது. அப்போது மும்பை நகரம் வெள்ளத்தில் மிதந்தது. பருவமழைக்கு மத்தியில் அவ்வப்போது மும்பையில் வெயிலும் சுட்டெரித்து வந்தது.
அதேபோல தற்போதும், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. கொளுத்திய வெயில் காரணமாக இரவிலும் மக்கள் கடும் புழுக்கத்தால் அவதி அடைந்தனர். இதற்கிடையே வெயிலின் தாக்கம் சில நாட்கள் நீடிக்கும் என்றும், அதன்பின்னர் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து இருந்தது.இந்த நிலையில், வழக்கம் போல நேற்றும் மதியம் வரையில் வெயில் சுட்டெரித்தது.
மாலை 4 மணிக்கு பின்னர் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு நகரம் ரம்மியமாக காட்சி அளித்தது. பின்னர் திடீரென மழை பெய்தது. ஆரம்பத்தில் பலத்த மழையாக பெய்தது. பின்னர் நேரம் செல்ல, செல்ல மழையின் தீவிரம் குறைந்து தூறல் போட்டபடி இருந்தது. நேற்று பெய்த இந்த மழை கொளுத்திய வெயிலுக்கு இதமாக இருந்தது. இதனால் மும்பைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.Related Tags :
Next Story