வேப்பூரில் 92 மி.மீ. மழை: ஓடையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது


வேப்பூரில் 92 மி.மீ. மழை: ஓடையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது
x
தினத்தந்தி 7 Oct 2017 4:00 AM IST (Updated: 7 Oct 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டம் வேப்பூரில் 92 மில்லி மீட்டர் பதிவானது. இந்த நிலையில் அந்த பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் மன்னம்பாடி–எடையூர் இடையே ஓடையில் இருந்த தரைப்பாலம் மூழ்கி அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைக்காலத்தில் அதிக மழைப்பொழிவும், தென்மேற்கு பருவமழைகாலத்தில் குறைந்த அளவு மழைப்பொழிவும் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்காலத்தில் சராசரி அளவை கடந்து மழை பெய்து வருகிறது.

வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. கடலூர் மாவட்டத்திலும் இடி–மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்தது. மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் தொடர்ந்து 3–வது நாளாக நேற்று முன்தினம் இரவு இடி–மின்னலுடன் லேசான மழை பெய்தது.

கடலூர் அருகே உள்ள கோண்டூர் காலனியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் குளம்போல தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருப்பதால் போதிய வடிகால் வசதி செய்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருத்தாசலம், வேப்பூர் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் மழை பெய்தது. இதன் காரணமாக விருத்தாசலம் அடுத்த மன்னம்பாடி அருகே செல்லும் உப்பு ஓடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மன்னம்பாடி–எடையூர் இடையே செல்லும் தரைப்பாலம் மூழ்கி போனதால், இரு கிராமங்களுக்கும் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் விருத்தாசலத்தில் இருந்து விளாங்காட்டூர், மன்னம்பாடி, கோவிலூர், நிதி நத்தம் செல்லும் அரசு பஸ்களும் தற்காலிகமாக நேற்று இயக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள சுமார் 15–க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் விருத்தாசலத்திற்கு பெண்ணாடம், வேப்பூர் சென்று சுமார் 25 கிலோ மீட்டர் சுற்றி வரவேண்டும் என்கிற நிலையில் இருக்கின்றனர்.

வேப்பூர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து வெளியேறும் நீர் இந்த ஓடையில் கலந்து, வெள்ளமாக வீராணம் ஏரியில் கலக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேபோன்று விளாங்காட்டூர் பகுதியில் பெய்த மழையால் அப்பகுதியில் விவசாயிகள் பயிர் செய்திருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன. விருத்தாசலம் பகுதியை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை வெயில் அடித்த நிலையில், திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது.

அதேபோல் காட்டு மயிலூர், மே.மாத்தூர், கீழ்செருவாய், தொழுதூர், வானமாதேவி, பண்ருட்டி என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில் கிழக்கு மத்திய வங்கக்கடல் முதல் அரபிக்கடல் வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

கடலூரை பொறுத்தவரை நேற்று காலையில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் மழை பெய்யவில்லை. மதியவேளைக்கு பிறகு வெயில் சுள்ளென சுட்டெரித்தது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேப்பூரில் 92 மில்லி மீட்டரும், குறைந்த பட்சமாக புவனகிரியில் 1 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. சராசரியாக 20.93 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தின் பிற இடங்களில் பெய்துள்ள மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:–

காட்டுமயிலூர் – 83

மே.மாத்தூர் – 58

கீழ்செருவாய் – 32

தொழுதூர் – 31

வானமாதேவி – 30

அண்ணாமலைநகர் – 24.50

பண்ருட்டி – 22.40

பரங்கிப்பேட்டை – 20

லக்கூர் – 12.40

குப்பநத்தம் – 9.60

சிதம்பரம் – 9.30

கொத்தவாச்சேரி – 7

விருத்தாசலம் – 4.40

பெலாந்துறை – 3


Related Tags :
Next Story