பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை சுகாதார தூதுவர்களாக பயன்படுத்த வேண்டும்


பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை சுகாதார தூதுவர்களாக பயன்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 7 Oct 2017 3:22 AM IST (Updated: 7 Oct 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை சுகாதார தூதுவர்களாக பயன்படுத்த வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அதிகாரி சம்பு கல்லோலிக்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பருவமழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அதிகாரி மற்றும் குடிசை மாற்று வாரியத்தின் முதன்மை செயலாளர் சம்பு கல்லோலிக்கர் கலந்து கொண்டு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள், டெங்கு காய்ச்சல் வந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்படும் வழிமுறைகள் குறித்தும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், கண்காணிக்கப்படும் முறை குறித்தும், கொசு ஒழிப்பு பணிகள் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படுவது குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசியதாவது;-

மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு உண்டாக்குவதன் மூலமாகத்தான் டெங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எளிதில் தடுக்க முடியும். இதற்கு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை சுகாதார தூதுவர்களாக பயன்படுத்த வேண்டும்.

பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் மாணவ- மாணவிகளிடம் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் உருவாகாமல் தடுக்கும் விதம் குறித்தும், காய்ச்சல் வந்தால் நீர்சத்து குறையாமல் தடுக்கும் முறை குறித்தும் தொடர்ந்து விளக்கம் அளித்து, மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் பெருமளவு டெங்கு பாதிக்காத வகையில் தடுக்கலாம். மேலும் வீடுகள் தோறும் துண்டு பிரசுரங்கள் மூலம் டெங்கு கொசு உண்டாகாமல் தடுத்தல், காய்ச்சல் வந்தால் மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல்முருகன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், மருத்துவ கல்லூரி முதல்வர் சாரதா, இணை இயக்குனர் (மருத்துவம்) சுரேஷ்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story