மருத்துவமனைகளில் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொசுவலையுடன் கூடிய படுக்கை வசதி
தஞ்சை ராசாமிராசுதார் மற்றும் மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட 23 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்காக தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு தனித்தனி கொசுவலையுடன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு டெங்குகாய்ச்சல் பரவி வருகிறது. பல்வேறு இடங்களில் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழக அரசு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.
தஞ்சையில் மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைகளுக்கு டெங்கு காய்ச்சலுக்கு என தனித்தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ராசாமிராசுதார் மருத்துவமனையில் குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2 இடங்களிலும் தனித்தனி கொசுவலையுடன் கூடிய தலா 10 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது தவிர சிறப்பு சிகிச்சை பிரிவில் தனியாக 4 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த 2 மருத்துவமனைகளிலும் வைரஸ்காய்ச்சலால் 210 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 23 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து தஞ்சை மருத்துவகல்லூரி முதல்வர் எஸ்.ஜெயக்குமாரிடம் கேட்ட போது, ‘‘தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை, ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைகளில் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 23 பேர் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு 24 மணி நேரமும் தலா 2 டாக்டர்கள், செவிலியர்களை கொண்ட குழுவினர் பணியமர்த்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர பயிற்சி டாக்டர்களும் சிகிச்சை அளித்து வருகிறார்கள். காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வருபவர்கள் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டு டெங்கு அறிகுறி இருந்தால் உடனடியாக தனி வார்டுகளில் அனுமதிக்கப்படுவர். மேலும் 2 மருத்துவமனைகளிலும் நிலவேம்பு கசாயம், கொதிக்கவைக்கப்பட்ட தண்ணீர் 24 மணி நேரமும் வழங்கப்படுகிறது’’என்றார்.