சர்வதேச பெண் குழந்தைகள் தின கருத்தரங்கம் பேராயர் தேவகடாட்சம் பேட்டி


சர்வதேச பெண் குழந்தைகள் தின கருத்தரங்கம் பேராயர் தேவகடாட்சம் பேட்டி
x
தினத்தந்தி 8 Oct 2017 4:00 AM IST (Updated: 8 Oct 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

குமரி சி.எஸ்.ஐ. பேராயம் சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது என பேராயர் தேவகடாட்சம் கூறினார்.

நாகர்கோவில்,

நலிவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக குமரி சி.எஸ்.ஐ. பேராயம் சமூகப் பொருளாதார கரிசனைக்குழு அமைத்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்த தோவாளை தாலுகாவில் செண்பகராமன்புதூர் ஊரை மையப்படுத்தி பெண் குழந்தைகளுக்கான மேம்பாட்டுத் திட்டப்பணிகளை 2004-ம் ஆண்டு முதல் பேராய பெண்கள் ஐக்கிய சங்கத்துடன் இணைந்து செய்து வருகிறோம்.

பொருளாதாரத்தில் நலிந்த செங்கல்சூளை பெண் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கென பகல் நேர பராமரிப்பு மையம், மாலை நேர பாட வகுப்புகள், பெண்களுக்கான பொருளாதார சுயசார்பு திட்டமான மாதாந்திர அஞ்சலக பண சேமிப்புத் திட்டம், சுய உதவிக்குழுக்கள் ஆகியவை இதன்மூலம் செயல்பட்டு வருகிறது. 2004-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரையிலான 12 ஆண்டு கால கட்டத்தில் அங்கன்வாடி வழியாக சுமார் 530 குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் குமரி பேராயத்தின் சமூக பொருளாதார கரிசனைக்குழு அடித்தட்டு மக்கள் மேம்பாட்டு பணிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள பேராய பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பாலின சமத்துவ விழிப்புணர்வு போட்டிகள் நாளை (திங்கட்கிழமை) நாகர்கோவில் சி.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்கும் மனித சங்கிலியும், அதைத்தொடர்ந்து மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் பேராய பள்ளி, கல்லூரி ஆசிரியர் மற்றும் பேராசிரியர்களுக்கு கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் பணியிடங்களில் பாலியல் வன்முறை குறித்த சட்ட கருத்து பகிர்வுகளும், குடும்ப வன்கொடுமை குறித்த கருத்து பகிர்வுகளும் பகிரப்படுகின்றன. சர்வதேசப் பெண் குழந்தைகள் நாளான 11-ந் தேதி காலை 10 மணிக்கு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி நூற்றாண்டு கலையரங்கில் பெண் குழந்தைகளின் முன்னேற்றம், சமூகத்தின் முன்னேற்றம் என்ற தலைப்பில் சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் பொதுமக்களும், சமூக மேம்பாட்டில் அக்கறையுள்ளவர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு பேராயர் தேவகடாட்சம் கூறினார். பேட்டியின் போது குமரி பேராய நிர்வாகக்குழு செயலாளர் டாக்டர் பென்சாம், நிதி மேலாண்மையாளர் வக்கீல் ராபர்ட் புரூஸ், பேராய பெண்கள் ஐக்கிய சங்க தலைவி லலிதா தேவகடாட்சம், பேராய கூட்டு மேலாண்மைப் பள்ளிகளின் கூட்டு மேலாளர் வக்கீல் சோபிதராஜ், நிர்வாகக்குழு உறுப்பினர் ஜெங்கின்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் இந்த விழா தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் பேராயர் தேவகடாட்சம் கலந்து கொண்டு பேசினார். அதில் பேராய சமூக பொருளாதார கரிசனைக்குழு செயலாளர் ஷினோ ஏசுதாஸ், பேராய பெண்கள் ஐக்கிய சங்க செயலாளர் சார்லட் சவுந்தர்ராஜன், இளையோர் கரிசனைக்குழு துறை இயக்குனர் டட்ஸ் ஞானராபி, பேராயரின் சிற்றாயர் ஜெசின் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story