இடப்பிரச்சினையில் டீ மாஸ்டர் அடித்து கொலை தந்தை- மகன் கைது


இடப்பிரச்சினையில் டீ மாஸ்டர் அடித்து கொலை தந்தை- மகன் கைது
x
தினத்தந்தி 8 Oct 2017 4:45 AM IST (Updated: 8 Oct 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

வாத்தலை அருகே இடப்பிரச்சினையில் டீ மாஸ்டரை அடித்து கொன்றதாக தந்தை- மகனை போலீசார் கைது செய்தனர்.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம் வாத்தலையை அடுத்த சிறுகாம்பூர் அருகே உள்ள செட்டிமங்கலம் அரிஜன தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சரவணன்(வயது 25). இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளியான சின்னசாமி(65) என்பவருக்கும் இடையே, அவர்களின் வீட்டுக்கு அருகே உள்ள இடம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

தற்போது விடுமுறையில் சரவணன் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் இடப்பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சின்னசாமியும், அவருடைய 16 வயது மகனும் சேர்ந்து கீழே கிடந்த செங்கலை எடுத்து சரவணனின் நெஞ்சில் ஓங்கி அடித்தனர். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

இதை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை சிறுகாம்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சரவணனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், வாத்தலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் மற்றும் போலீசார், சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சின்னசாமி மற்றும் அவருடைய மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story