வங்கி அதிகாரி, விற்பனை பிரதிநிதியிடம் பணம், செல்போன் பறிப்பு போலீசார் வலைவீச்சு


வங்கி அதிகாரி, விற்பனை பிரதிநிதியிடம் பணம், செல்போன் பறிப்பு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Oct 2017 3:45 AM IST (Updated: 8 Oct 2017 2:09 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூர் அருகே அரிவாளை காட்டி மிரட்டி, வங்கி அதிகாரி, விற்பனை பிரதிநிதியிடம் பணம், செல்போனை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தா.பழூர்,

அரியலூரை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 51). இவர் தா.பழூர் இந்தியன் வங்கியில் உதவி மேலாளராக பணி புரிந்து வருகிறார். மகாலிங்கம் நேற்று முன்தினம் வங்கியில் வேலையை முடித்துவிட்டு, கும்பகோணம் சென்று பின்னர் சொந்த ஊரான அரிய லூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் இரவு 10 மணியளவில் சென்று கொண்டிருந்தார். அப்போது சுத்தமல்லி அருகே நடுவலூர் சமத்துவ புரம் சாலை அருகே வந்தபோது, பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 மர்ம நபர்பர்கள், மகாலிங்கத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் மர்மநபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி மகாலிங்கத்திடம் இருந்து ரூ.5 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் பேக்கை பறித்து கொண்டு அங் கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து உடையார் பாளையம் போலீஸ் நிலையத்தில் மகாலிங்கம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த கீழக்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை மகன் ஆனந்தவேல் (29). இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு, சொந்த ஊருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது தா.பழூரை அடுத்த இடங்கண்ணி அரசு நடு நிலைப்பள்ளி அருகே வந்தபோது, பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் 6 பேர், ஆனந்தவேலை மறித்தனர். பின்னர் அரிவாளை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ஆவணங்களை பறித்துவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் ஆனந்தவேல் புகார் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை வங்கி அதிகாரி மகாலிங்கத்திடம் இருந்து பறிக்கப்பட்ட பேக், மதனத்தூர் பாலம் அருகே கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மகாலிங்கத்தை அழைத்து கொண்டு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். மேலும் இதுகுறித்து தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி தலைமையிலான போலீசார் மகாலிங்கம், ஆனந்தவேல் ஆகியோருடன் சேர்ந்து பணம் பறித்த இடங் களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து உடையார் பாளையம், தா.பழூர் போலீசார் வங்கி அதிகாரி, விற்பனை பிரதிநிதியிடம் பணம், செல்போன்களை பறித்து சென்றவர்கள் ஒரே தரப்பினரா? அல்லது வெவ்வேறு நபர்களா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தா.பழூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து வங்கிஅதிகாரி, விற்பனை பிரதிநிதியிடம் பணம், செல்போனை பறித்து சென்ற மர்மநபர்களின் அட்ட காசத்தால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

Related Tags :
Next Story