பெண்ணாடம் அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
பெண்ணாடம் அருகே குடநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம்.
பெண்ணாடம் அருகே உள்ளது பெ.பூவனூர் ஊராட்சி. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றி அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றின் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் அவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்றும் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை பெ.பூவனூர் ஊராட்சி அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் பெ.பூவனூர்–பெண்ணாடம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்த பெண்ணாடம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் எங்கள் பகுதிக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் நாங்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும் விளை நிலங்களுக்கும் சென்று குடிநீர் பிடித்து வருவதால் கடும் அவதியடைகிறோம்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்கள் பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் போலீசார், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் கூறி இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர் பிரச்சினையை சரிசெய்து தருவதாக உறுதியளித்தனர். இதை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.