மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் பலி அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
மயிலாடுதுறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார்சைக்கிளில் சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
மயிலாடுதுறை,
திருவாரூர் மாவட்டம், திருமியச்சூர் கொடியனூர் பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் அபினேஷ் (வயது 22). இவர், மயிலாடுதுறையில் உள்ள ஒரு கல்லூரியில் 3–ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை கல்லூரிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் அபினேஷ் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜகுமாரன் (22) என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்றார். மயிலாடுதுறை அருகே மூங்கில்தோட்டம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அபினேஷ், ராஜகுமாரன் ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அபினேஷ் பரிதாபமாக இறந்தார். மேலும், படுகாயம் அடைந்த ராஜகுமாரன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.