கனமழை வெள்ளத்தில் தரைப்பாலங்கள் அடித்து செல்லப்பட்டன


கனமழை வெள்ளத்தில் தரைப்பாலங்கள் அடித்து செல்லப்பட்டன
x
தினத்தந்தி 8 Oct 2017 5:26 AM IST (Updated: 8 Oct 2017 5:25 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளேகால் தாலுகாவில் பெய்த கனமழையால், வடக்கேஹல்லா, தொட்டிந்துவாடி பகுதிகளில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

கொள்ளேகால்,

கொள்ளேகால் தாலுகாவில் பெய்த கனமழையால், வடக்கேஹல்லா, தொட்டிந்துவாடி பகுதிகளில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் 7 கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தாமதமாக தொடங்கிய பருவமழை தற்போது பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக பெங்களூரு, தாவணகெரே, மைசூரு, சித்ரதுர்கா போன்ற பகுதிகள் தொடர் மழையால் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. தொடர்ந்து பெய்து வரும் இந்த கனமழையால் மாநிலத்தில் உள்ள முக்கியமான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதேபோல் ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதேபோல் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் பகுதியில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கொள்ளேகால் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. விடிய, விடிய இடி–மின்னலுடன் கொட்டித்தீர்த்த இந்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக கொள்ளேகால் தாலுகா வடக்கேஹல்லா பகுதியில் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

அந்த தரைப்பாலம், மலை மாதேஸ்வரா கோவில் மற்றும் தமிழ்நாடு மேட்டூருக்கு செல்லும் பிரதான சாலை என்பதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாட்டள்ளி, நால்ரோடு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதேபோல் கொள்ளேகால் தாலுகா தொட்டிந்துவாடி பகுதியில் உள்ள தரைப்பாலமும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியை சுற்றியுள்ள 7 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கனமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story