பெட்ரோல், டீசல் மீதான கலால்-மதிப்பு கூட்டு வரிகளை உடனே குறைக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


பெட்ரோல், டீசல் மீதான கலால்-மதிப்பு கூட்டு வரிகளை உடனே குறைக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Oct 2017 4:45 AM IST (Updated: 9 Oct 2017 2:04 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி, மதிப்பு கூட்டு வரியை உடனடியாக குறைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் அவற்றின் மீதான கலால் வரியை 2 சதவீதம் குறைத்த மத்திய அரசு, மாநில அரசுகளும் மதிப்புக்கூட்டு வரியை 5 சதவீதம் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதையேற்று குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருட்கள் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைத்துள்ள நிலையில், தமிழக அரசு அமைதி காப்பது கண்டிக்கத்தக்கது.

கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து அதிகரித்த வரியை குறைத்தாலே பெட்ரோல் விலை லிட்டருக்கு 15.77 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 15.47 ரூபாயும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த வரிக்குறைப்பை செய்ய அரசுகள் மறுக்கின்றன.

மத்திய, மாநில அரசுகள் உயர்த்தப்பட்ட வரியை குறைப்பதால் அவற்றுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படப்போவதில்லை. எரிபொருட்கள் மீதான மதிப்புக் கூட்டு வரி, கலால் வரியில் மாநில அரசின் பங்கு ஆகியவற்றின் மூலம் தமிழக அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.26.48, டீசல் விற்பனை மூலம் ரூ.18.26 வருவாய் கிடைக்கிறது. பெட்ரோலின் உற்பத்திச் செலவைவிட அதிகமாக மதிப்புக்கூட்டு வரியை மாநில அரசு வசூலிப்பது எந்த வகையிலும் முறையானதோ, நியாயமானதோ அல்ல.

எனவே, பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் உயர்த்திய கலால் வரியையும், தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் உயர்த்திய மதிப்புக் கூட்டு வரியையும் உடனடியாக குறைக்க வேண்டும். இதன் மூலம் எரிபொருட்களின் விலை 22 சதவீதம் வரை குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story