கல்லணைக்கால்வாய் தண்ணீர் கடைமடை பகுதிக்கு நாளை சென்றடையும் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி


கல்லணைக்கால்வாய் தண்ணீர் கடைமடை பகுதிக்கு நாளை சென்றடையும் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி
x
தினத்தந்தி 9 Oct 2017 4:00 AM IST (Updated: 9 Oct 2017 3:44 AM IST)
t-max-icont-min-icon

கல்லணைக்கால்வாய் தண்ணீர் கடைமடை பகுதிக்கு நாளை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தண்ணீரை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு வடகிழக்குப்பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்காததாலும், போதிய அளவு தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படவில்லை.

இதனால் குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 2-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததை தொடர்ந்து கல்லணையில் இருந்து பாசனத்துக்கு 5-ந்தேதி காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது.

நாளை சென்றடையும்

இதில் கல்லணைக்கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள வெட்டிக்காடு பகுதியை சென்றடைந்தது. இந்த தண்ணீர் கல்லணைக்கால்வாயின் கடைமடை பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மும்பாலை ஏரியை நாளை (செவ்வாய்க்கிழமை) காலை சென்றடையும் என்று பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது கல்லணைக்கால்வாயில் இருந்து கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை. கல்யாணஓடை வாய்க்காலில் மட்டும் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நாளை கடைமடை பகுதிக்கு சென்றடைந்தவுடன் கிளை வாய்க்கால்கள் மற்றும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகாயத்தாமரைகள் அகற்றம்

மேலும் இந்த தண்ணீர் தங்கு தடையின்று செல்வதற்காக கல்லணைக்கால்வாயில் ஆக்கிரமித்து இருந்த ஆகாயத்தாமரை மற்றும் செடி, கொடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. பொதுப்பணித்துறையின் கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ் உத்தரவின் பேரில் கல்லணைக்கால்வாய் செயற்பொறியாளர் ரேவதி, உதவி செயற்பொறியாளர் சண்முகவேலு மேற்பார்வையில் நகர இளம் பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் உதவி பொறியாளர்கள் இந்த பணிகளை கண்காணித்து வருகிறார்கள்.

இதற்காக 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆற்றில் கயிறு மூலம் இறங்கி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கல்லணையில் இருந்து தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டதையொட்டி தற்போது விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். 

Related Tags :
Next Story