“டெங்குவை கட்டுப்படுத்தாத சுகாதார ஊழியர்களை கண்டுபிடித்து தாருங்கள்” போலீஸ் நிலையத்தில் மனு


“டெங்குவை கட்டுப்படுத்தாத சுகாதார ஊழியர்களை கண்டுபிடித்து தாருங்கள்” போலீஸ் நிலையத்தில் மனு
x
தினத்தந்தி 9 Oct 2017 4:30 AM IST (Updated: 9 Oct 2017 3:46 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாத சுகாதாரத்துறை ஊழியர்களை கண்டுபிடித்து தாருங்கள் என்றும், கொசுக்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 மாதங்களில் 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், சேலத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் சுகாதார ஊழியர்களை காணவில்லை என்றும், கொசுவை சுட்டு வீழ்த்த வீட்டிற்கு 2 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், மாநகர செயலாளர் வெங்கடேஷ், மாநகர தலைவர் சதீஷ் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க ஊர்வலமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொசுக்களை சுட்டு வீழ்த்து..!

மேலும் அவர்கள், எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் கொசுக்களை சுட்டு வீழ்த்து..! டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்தாத மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்களை காணவில்லை, அவர்களை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்...! கொசுக்களை சுட்டு வீழ்த்த பயிற்சி பெற்ற காவலர்கள் மூலம் எங்களுக்கு பாதுகாப்பு கொடு..! மனித உயிரை காவு கேட்கும் கொசுக்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு வந்தனர்.

பின்னர், போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் அறை பூட்டப்பட்டிருந்தது. அவர் வெளியே சென்றிருப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கிருந்த போலீசாரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்கள் பாதிப்பு

சேலத்தில் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலுக்கு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால், இதை கட்டுப்படுத்த வேண்டிய மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள் பல நாட்களாக காணவில்லை. அவர்களுக்கு என்ன ஆனது? என்று தெரியவில்லை.

இதனால் எங்கள் பகுதியில் வசிக்கும் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவி வருகிறது. எனவே, காணாமல் போன மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்களை கண்டுபிடித்து தர வேண்டும். கொசுக்களிடம் இருந்து மக்களை பாதுகாக்கவும், கொசுக்களை சுட்டு வீழ்த்திடும் வகையில் பயிற்சி பெற்ற போலீஸ்காரர்கள் 2 பேரை வீட்டிற்கு காவலுக்கு நிற்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

Related Tags :
Next Story