ஜனவரி மாதம் வெளியாகிறது “2.0 படத்தின் 3டி காட்சிகளை பார்த்து வியந்தேன்” ரஜினிகாந்த் பேச்சு


ஜனவரி மாதம் வெளியாகிறது “2.0 படத்தின் 3டி காட்சிகளை பார்த்து வியந்தேன்” ரஜினிகாந்த் பேச்சு
x
தினத்தந்தி 9 Oct 2017 4:30 AM IST (Updated: 9 Oct 2017 3:50 AM IST)
t-max-icont-min-icon

“2.0 படத்தின் 3டி காட்சிகளை பார்த்து வியந்து போனேன்” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை,

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்’ இரண்டாம் பாகமான ‘2.0’ படப்பிடிப்பு முடிந்து கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், ரீரிக்கார்டிங் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. எமிஜாக்சன் கதாநாயகியாகவும் இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் வில்லனாகவும் நடித்துள்ளனர். ஷங்கர் இயக்கி உள்ளார்.

ரூ.400 கோடி செலவில் இந்த படம் தயாராகி உள்ளது. ரஜினி படங்களில் அதிக பட்ஜெட் படம் இதுவாகும். இதன் படப்பிடிப்பை 2015-ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு வருடங்களாக விறுவிறுப்பாக நடத்தி முடித்துள்ளனர். இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் அரங்குகள் அமைத்து நடத்தப்பட்டது.

2.0 படம் தயாரான வீடியோ காட்சி கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டு படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த், அக்‌ஷய்குமாருக்கு மேக்கப் போடுவது, எந்திர மனிதர்களை உருவாக்குவது, ரஜினிகாந்த் அந்தரத்தில் பறந்து வில்லன்களுடன் சண்டையிடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்று இருந்தன.

தற்போது இரண்டாவது தடவையாக 3டி கேமராவில் படப்பிடிப்பை நடத்திய வீடியோ காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். 3டியில் 2.0 படம் எப்படி உருவானது என்ற விளக்க காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. 3டி காட்சிகளை ரஜினிகாந்த் பார்த்து ரசிப்பது, அவரது எந்திரன் கதாபாத்திர தோற்றம், படப்பிடிப்பில் இருந்த சவால்களை இயக்குனர் ஷங்கர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விளக்குவது போன்றவை வீடியோவில் இருந்தன.

வீடியோ பதிவில் ரஜினிகாந்த் பேசும்போது, “2.0 படத்தின் கதைக்கு 3டி தேவைப்பட்டது. அந்த தொழில் நுட்பத்தை படத்தில் நன்றாக பயன்படுத்தி உள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி மீண்டும் மீண்டும் என்னை பார்க்கத் தூண்டியது. காட்சிகளை பார்த்து நான் வியந்து போனேன்” என்று கூறியுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் கூறும்போது “நேரடியாக 3டி கேமராவில் 2.0 படத்தை படம்பிடித்து உள்ளோம். இந்த படத்தை திரையிட தியேட்டர்கள் 3டி தொழில்நுட்பத்துக்கு மாற்றப்படும்” என்றார். இந்த வீடியோவை ரசிகர்கள் ஆர்வத்தோடு பார்த்தனர். 2.0 படம் ஜனவரி மாதம் 25-ந்தேதி திரைக்கு வருகிறது. 

Related Tags :
Next Story