நாகர்கோவிலில் அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு


நாகர்கோவிலில் அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 9 Oct 2017 4:30 AM IST (Updated: 9 Oct 2017 3:50 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவருடைய நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அறுகுவிளை திருவள்ளுவர்நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவருடைய நண்பர் ராஜா (40). இருவரும் கூலி தொழில் செய்து வருகிறார்கள்.

 இந்த நிலையில் நேற்று காலை 2 பேரும் வேலைக்காக பார்வதிபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் வேலை முடிந்து மதியம் 1.30 மணி அளவில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை ராஜா ஓட்டினார்.

 2 பேரும் கட்டையன்விளை அருகே வந்தபோது பின்னால் வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் எதிரே வந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.

 இந்த விபத்தில் கண்ணன், ரோட்டில் தூக்கி வீசப்பட்டு பஸ்சின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார். அவரது உடலில் பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் கண்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

ராஜாவுக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த  ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

கண்ணனின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 ராஜாவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story